லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., கிடுக்கி
பெங்களூரு: லோக் ஆயுக்தா, துணை லோக் ஆயுக்தா நீதிபதிகள், ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யும் வகையில், வரும் கூட்டத்தொடரின் போது, சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு, மாநில அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.சி., ரமேஷ் பாபு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பிரதிநிதிகள், தங்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தா அறிவித்திருந்தது. ஆனால், அனைத்து கட்சிகளை சேர்ந்த சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், தாக்கல் செய்யாமல் அலட்சியம் காட்டினர். இதையடுத்து, கர்நாடக லோக் ஆயுக்தா, சொத்து பட்டியல் தாக்கல் செய்யாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பெயர்களை அறிவித்திருந்தது. இதில் பெரும்பாலானோர் காங்கிரசை சேர்ந்தவர்கள் தான். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.சி., சுரேஷ் பாபு, மாநில அரசுக்கும், சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: கர்நாடகா லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும், மக்கள் பிரதிநிதிகள், தங்கள் சொத்து விபரங்களை, லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். நடப்பாண்டு ஜூன் 30ம் தேதிக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, மக்கள் பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை, லோக் ஆயுக்தா வெளியிட்டு உள்ளது; இது வரவேற்கத்தக்கது. அதுபோன்று, லோக் ஆயுக்தாவில் பணிபுரியும் லோக் ஆயுக்தா, துணை லோக் ஆயுக்தாவும் தங்கள் சொத்து பட்டியலை வெளியிடுவது பொது நலனுக்காக அவசியம். பொது நலன் கருதி, 2021 ஜூலை 12ல் கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தை திருத்தி, அங்கு பணிபுரியும் லோக் ஆயுக்தா, துணை லோக் ஆயுக்தாவின் சொத்து, ஊதிய பட்டியலை வெளியிட சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். எனது கோரிக்கையின்படி, 2021 ஆக., 5ம் தேதியன்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு கடிதம் எழுதிய மாநில அரசு, சட்டத்திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதையடுத்து, 2021 அக்., 27ல், லோக் ஆயுக்தா பதிவாளரிடம், சட்டத்திருத்தம் குறித்து தனது கருத்தை தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. இருப்பினும், அந்த கடிதத்துக்கு, லோக் ஆயுக்தா பதிவாளர், இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. பொது நலனுக்காக கர்நாடகாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாமாக முன்வந்து, தங்கள் சொத்து விபரங்களை வெளியிடுகின்றனர். அதுபோன்று லோக் ஆயுக்தாவும் வெளிப்படையாக செயல்படுவது முக்கியம். அத்துடன், லோக் ஆயுக்தா, 2017 - 18 முதல் 2021 - 22 வரை சட்டசபையில், அதன் ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. கர்நாடக சட்டசபையின் 153வது அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட துறை சார்ந்த ஆண்டு அறிக்கைகள், கணக்குகளின் பட்டியலில், கர்நாடக லோக் ஆயுக்தா, நான்கு ஆண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கவில்லை என்று கண்டறியப்பட்ட உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் அதன் ஆண்டு அறிக்கைகள், கணக்குகளை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் லோக் ஆயுக்தா சமர்ப்பிக்கவில்லை. எனவே, ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கும் வகையில், சட்டசபை கூட்டத்தொடரின் போது, சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.