இளம் நடிகையை மிரட்டிய மாஜி காதலன் மீது வழக்கு
அன்னபூர்ணேஸ்வரிநகர்: அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக, இளம் நடிகையை மிரட்டிய, முன்னாள் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரிநகரில் வசிக்கும், 25 வயது இளம்பெண், சில கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும், சரத்குமார், 27, என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாட்டால் சில மாதங்களுக்கு முன், இருவரும் பிரிந்தனர். காதலித்தபோது சரத்குமாருக்கு நடிகை, இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி முன்னாள் காதலனை சந்தித்த நடிகை, அந்த இரண்டு லட்சம் ரூபாயை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நடிகையை, சரத்குமார் ஆபாசமாக திட்டியதுடன், நடிகையின் கார் கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். கடந்த 10ம் தேதி நடிகையிடம் மொபைல்போனில் பேசிய சரத்குமார், ‘பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால், பயந்த நடிகை, சரத்குமார் மீது அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி, சரத்குமாருக்கு ‘சம்மன்’ அனுப்பியுள்ளனர்.