சயனைட் கொடுத்து இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு: பெங்களூரு, காடுகோடியின், பிரஸ்டீஜ் சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சோஹன் ஹல்தார், 29. இவர் தனது பைக்கை விற்பனை செய்ய, 2016ன் ஆகஸ்டில் முகநுாலில் விளம்பரம் செய்திருந்தார்; தன் மொபைல் நம்பரையும் பதிவிட்டிருந்தார்.இதை கவனித்த கார்த்திக் தவுலத், 35, சோஹன் ஹல்தாரை போனில் தொடர்பு கொண்டு, பைக்கை வாங்க விரும்புவதாக கூறினார். இருவரும் சந்தித்து பேசினர். இவர் வசதியானவர்; தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டு, கொள்ளையடிக்க கார்த்திக் தவுலத் திட்டம் தீட்டினார்.சயனைட் வாங்கி கொண்டு, 2016ன் ஆகஸ்ட் 3ம் தேதி சோஹன் ஹல்தாரின் பிளாட்டுக்கு சென்றார். அப்போது அவர் படுத்திருந்தார்.பைக் வாங்குவதால் இனிப்பு கொண்டு வந்துள்ளேன். அதை உங்கள் வாயில் போடுகிறேன் என, நம்ப வைத்து சயனைட் போட்டு கொலை செய்தார்.அதன்பின் அவரது மொபைல் போன், பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., கார்டு, பைக், ஆர்.சி., புக், ஹெல்மெட் உட்பட, பல பொருட்களை திருடிக்கொண்டு தப்பினார். ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, 27,000 ரூபாய் எடுத்து கொண்டார். சோஹன் ஹல்தார் இறந்து கிடப்பதை கவனித்த, அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பின் அங்கு வந்த காடுகோடி போலீசார், உடலை மீட்டு விசாரித்தனர். கொலையாளி கார்த்திக் தவுலத்தை கைது செய்தனர். பெங்களூரு ரூரல் ஒன்றாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கார்த்திக் தவுலத்தின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் நீதிபதி ரவீந்திரா தீர்ப்பளித்தார்.