அரபு நாட்டினருக்காக ‘மெடிக்கல் டூரிசம்’
பெங்களூரு: ‘‘மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவுக்கு வரும் அரபு நாடுகளின் சுற்றுலா பயணியரை, கர்நாடகாவுக்கு ஈர்க்கும் நோக்கில், ‘மெடிக்கல் டூரிசம்’ திட்டம் வகுக்கப்படுகிறது,’’ என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார். இதுகுறித்து, பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: மருத்துவ சிகிச்சைக்காக, அரபு நாடுகளில் இருந்து பெருமளவில் மக்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். இவர்களை கர்நாடகாவுக்கு ஈர்க்கும் வகையில், மெடிக்கல் டூரிசம் திட்டம் வகுக்கப்படுகிறது. சுற்றுலா துறை மற்றும் சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கர்நாடகாவை மருத்துவம், சுற்றுலாவில் மேம்படுத்துவது அரசின் எண்ணமாகும். கர்நாடகாவின் முக்கிய மருத்துவமனைகள், சிறப்பு வல்லுநர்கள், அதிநவீன சிகிச்சைகள், மருத்துவ சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது, அரசின் குறிக்கோளாகும். அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு சிகிச்சை, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி உட்பட, அத்தியாவசிய வசதிகளை வழங்க, மெடிக்கல் டூரிசம் திட்டம் உதவும். திட்டம் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் காதருடன் ஆலோசனை நடத்தப்படும். வரும் ஜனவரியில் பெங்களூரில் டாக்டர்கள், முக்கியமான மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் உட்பட, சம்பந்தப்பட்டவர்களுடன் மாநாடு நடத்தப்படும். கர்நாடகாவில் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவமனைகள், அனுபவம் மிக்க டாக்டர்கள், மருத்துவ வசதிகள் உள்ளன. அரபு நாடுகளுடனான தொடர்பை பலப்படுத்தவும், கர்நாடகாவின் மருத்துவம், சுற்றுலாவை மேம்படுத்த, இத்திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.