பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ பயணியர் வசதிக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 200 'ஏசி' மினி பஸ்களை இயக்க, அரசிடம் பி.எம்.டி.சி., முன்மொழிவு சமர்ப்பித்து உள்ளது. பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்ட போதும், பல பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்தை அடைவது பயணியருக்கு இன்னும் சவாலாகவே உள்ளது. குறிப்பாக, மெட்ரோ நிலையத்தில் இருந்து சில கி.மீ., தொலைவில் வசிக்கும் மக்கள், ஆட்டோ, வாடகை கார்கள் அல்லது தங்களது சொந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் வகையில், பி.எம்.டி.சி., மெட்ரோ இணைப்பு பஸ் சேவையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, 200 'ஏசி' மினி பஸ்கள் வாங்க உள்ளது. இந்த பஸ்கள், அப்பகுதிகளின் சிறிய சாலைகளில் எளிதாக பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பயணியர் தங்கள் வீடு அல்லது பணி செய்யும் இடத்திற்கு அருகில் இருந்து பஸ்சில் ஏறி, மெட்ரோ ரயில் நிலையத்தை அடைய வழிவகுக்கும். இதற்காக, மத்திய அரசின் 'பி.எம்., பி - டிரைவ்' திட்டத்தின் கீழ், பி.எம்.டி.சி.,யில் படிப்படியாக, 4,500 மின்சார பஸ்களில், 200 மினி ஏசி பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த பஸ்கள், மெட்ரோ இணைப்பு சேவைக்காக பயன்படுத்த பி.எம்.டி.சி., திட்டமிட்டு உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவில் இந்த பஸ்கள் இயக்கப்படும். மின்சார பஸ்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். நகரில் மாசு கட்டுப்படுத்தப்படும்.