சட்டவிரோத லே - அவுட் அகற்றம்; அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரிக்கை
பெங்களூரு : ''கர்நாடக நகர்ப்பகுதிகளில் அமைக்கப்படும் சட்டவிரோத லே - அவுட்கள் தயவு, தாட்சண்யமின்றி அகற்றப்படும்,'' என, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சேகவுடா, விதிமுறை 330ன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியதாவது: நகர்ப்பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் லே - அவுட்டுகள் அகற்றப்படும். இத்தகைய லே - அவுட்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் லே - அவுட் அமைப்போர், அதன் வடிவம் குறித்து தகவல் தெரிவித்து, முறைப்படி நகர மேம்பாட்டுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல், லே - அவுட் அமைப்பது சட்டவிரோதம். இதுபோன்ற லே - அவுட்களின் மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி கிடைக்காது. சட்டவிரோத லே - அவுட்களை கட்டுப்படுத்த, அதிகாரிகளுக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத லே - அவுட்களை கட்டுப்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது, சஸ்பெண்ட் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. நகர்ப்பகுதிகளில் ஏழைகளுக்கு மனை வழங்க திட்டம் வகுக்கப்படுகிறது. பெங்களூரை போன்று, மற்ற நகரங்களிலும் சொத்துகளுக்கு இ - பட்டா அளிக்க, அரசு ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, சட்டத்துறையுடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.