உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோடி மடாதிபதியை சந்தித்த அமைச்சர் பரமேஸ்வர்

 கோடி மடாதிபதியை சந்தித்த அமைச்சர் பரமேஸ்வர்

பெங்களூரு: முதல்வர் பதவிக்கு, சித்தராமையாவும், சிவகுமாரும் இழுபறியில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழ்நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கோடி மடாதிபதியை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை தனக்கு விட்டுத்தரும்படி, துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம் பிடிக்கிறார். ஆனால் முதல்வர் சித்தராமையா தயாராக இல்லை. முதல்வர், துணை முதல்வரின் பதவி யுத்தத்தால், அரசிலும், கட்சியிலும் குழப்பமான சூழ்நிலை உருவானது. இருவரும் சந்தித்து பேசி, பெலகாவி கூட்டத்தொடருக்கு பின், பதவி பகிர்வு குறித்து ஆலோசிக்கலாம் என, முடிவு செய்தனர். குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்த நிலையில், உள் துறை அமைச்சர் பரமேஸ்வர், ஹாசனின் பிரசித்தி பெற்ற கோடி மடத்தின் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளை, நேற்று காலை சந்தித்து ஆசி பெற்றார்.இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, ரகசியமாக பேசினர். பரமேஸ்வரும் காங்கிரசின் மூத்த தலைவர். இவர் 2013 லேயே முதல்வராகியிருக்க வேண்டும். ஆனால் கொரட்டகரே தொகுதியில் தோற்றதால், முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது. பெலகாவி கூட்டத்தொடர் முடிந்த பின், மீண்டும் முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசனை நடக்கலாம். சிவகுமார், சித்தராமையா இருவரும் பிடிவாதத்தை தளர்த்தாவிட்டால், அவர்களை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வராக்க, காங்கிரஸ் மேலிடம் முன் வரலாம். அப்போது தனக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என, பரமேஸ்வர் எதிர்பார்க்கிறார். இது குறித்து, ஆலோசனை பெறும் நோக்கில், கோடி மடாதிபதியை அமைச்சர் பரமேஸ்வர் சந்தித்திருக்கலாம். கோடி மடாதிபதி அரசியல், இயற்கை சீற்றம் உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும், துல்லியமாக கணித்து கூறுவார். இவர் கூறிய பல ஆருடம் பலித்துள்ளது. எனவே தனக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி, கேட்டிருக்கலாம் என, தகவல் வெளியாகியுள்ளது. தன் ஹாசன் வருகை குறித்து, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கோ, போலீசாருக்கோ அமைச்சர் பரமேஸ்வர் தகவல் தெரிவிக்கவில்லை. திடீரென வந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ