உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் அமைச்சர் பரமேஸ்வர் சந்திப்பால் சலசலப்பு

மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் அமைச்சர் பரமேஸ்வர் சந்திப்பால் சலசலப்பு

பெங்களூரு: மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.சமீபத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள், அமைச்சர் பரமேஸ்வரிடம் ராஜினாமா கேட்டு வலியுறுத்தவில்லை.

நெருக்கடி மாற்றம்

பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு மைதானம் முன் நடந்த கூட்ட நெரிசலில், 11 பேர் பலியான சம்பவம் நடந்தபோது, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென, பா.ஜ., நெருக்கடி கொடுத்தது. தற்போது, திடீரென அவரை தவிர்த்துவிட்டு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ராஜினாமா செய்ய வேண்டுமென பா.ஜ., நெருக்கடி கொடுக்கிறது.ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, முதல்வர், துணை முதல்வரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் பரமேஸ்வரிடம் மென்மையாக நடந்து கொண்டார்.இதற்கிடையே மத்திய அமைச்சர் சோமண்ணாவை, பெங்களூரின் அவரது இல்லத்தில், அமைச்சர் பரமேஸ்வர் நேற்று காலை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி பரமேஸ்வர் அளித்த பேட்டி:பெங்களூரில் இருந்து துமகூருக்கு சென்றால், கண்களை மூடி திறப்பதற்குள் சென்றடைகிறோம். துமகூரின் எல்லை எது என்பதே தெரிவது இல்லை. எனவே தேசிய நெடுஞ்சாலையில் துமகூரு நுழைவாசல் துவக்கத்தில், வரவேற்பு கோபுரம் பொருத்த, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு கோபுரம்

தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநர், வரவேற்பு கோபுரம் பொருத்த அனுமதி மறுத்துள்ளார். எனவே மத்திய அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் அனுமதி பெற்றுத்தரும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளேன்.ராம்நகரை பெங்களூரில் சேர்த்துக் கொண்டதை போன்று, துமகூரையும் பெருநகர பெங்களூரு எல்லையில் சேர்ப்பது தொடர்பாக சோமண்ணாவுடன் ஆலோசித்தேன்.துமகூருக்கு மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என, இரண்டும் கிடைப்பது நல்லது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். துமகூரு மாவட்டத்துக்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்கள் குறித்தும், வேண்டுகோள் விடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ