சரியான தகவலுடன் வராத அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்
பெங்களூரு: ஜி.பி.ஏ., எலக்ட்ரிகல் இன்ஜினியர்களுடன், அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, நேற்று ஆலோசனை நடத்தினார். ஆனால் சில இன்ஜினியர்கள் தேவையான தகவல்களுடன் வரவில்லை. இது, அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் கூறியதாவது: ஐந்து மாநகராட்சிகளில், தெரு விளக்குகளுக்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்தப்படுகிறது, எல்.இ.டி., பல்புகள் பொருத்திய பின், மின் கட்டண பில் எவ்வளவு வருகிறது என்ற புள்ளி - விபரங்கள் தெரிவிக்க வேண்டும். ஆலோசனை கூட்டம் நடத்தினால், குறைந்தபட்ச தகவலும் இல்லாமல் வந்துள்ளீர்கள்... என் முகத்தை பார்த்து செல்ல வந்தீர்களா... அரசு பணி என்றால், கையை வீசிக்கொண்டு வரலாம், செல்லலாம் என்ற மனப்போக்கு அதிகரித்து விட்டது. அதிகாரிகளின் இத்தகைய செயலால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. பெங்களூரில் எல்.இ.டி, பல்புகள் பொருத்தும் திட்டம் நிறைவடைந்தால். 61.01 சதவீதம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். கடந்த, 2025ம் ஆண்டு மே 7ம் தேதியன்று எல்.இ.டி., பல்புகள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகர் முழுதும் 3,02,919 எல்.இ.டி., பல்புகள் பொருத்தியிருக்க வேண்டும். தற்போது 2,67,270 பல்புகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் சரியான நேரத்தில் திட்டத்தை முடிக்காமல் தவறான புள்ளி - விபரங்களை தருவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.