உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் சதீஷ் பேச்சு

சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் சதீஷ் பேச்சு

பெங்களூரு: ''கிரஹலட்சுமி திட்டத்தின் பணம் வரவில்லை என்பதால், ஆகாயம் கழன்று விழுந்துவிடாது,'' என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதித் திட்டங்களில், கிரஹ லட்சுமி திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண்கள் பலரும் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர்.திட்டத்தை செயல்படுத்திய ஆரம்ப நாட்களில், மாதந்தோறும் பணம் வந்தது. ஆனால் இரண்டு மாதங்களாக, கிரஹ லட்சுமி தொகை வரவில்லை. இதனால் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இவர்களை சமாதானம் செய்த மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், 'இன்னும் சில நாட்களில் இரண்டு மாதங்களுக்கான தொகை, பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படும்' என, கூறியிருந்தார்.ஆனால் தாவணகரேவில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியிடம், ஊடகத்தினர் கேட்டபோது, ''இரண்டு மாதங்கள் கிரஹலட்சுமி உதவித்தொகை வழங்காவிட்டால், ஆகாயம் கழன்று விழுந்து விடாது. மாதந்தோறும் பணம் வர வேண்டும் என, நினைப்பது சரியல்ல,'' என்றார்.இவரது பேச்சுக்கு, பயனாளிகளும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ம.ஜ.த., 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'காங்கிரசுக்கு இரட்டை நாக்கு. சொன்னபடி நடக்காத அரசு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒரு பேச்சு; ஆட்சிக்கு வந்த பின் அனைத்தும் தலைகீழாக மாறிவிடும். வாக்குறுதி தவறுவதன் மறு பெயரே காங்கிரஸ்' என கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி