மர்ம பொருள் வெடிப்பில் காயமடைந்த மாணவர்களை சந்தித்த அமைச்சர்கள்
பீதர்: பீதரில் மர்ம பொருள் வெடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே சந்தித்து ஆறுதல் கூறினார். பீதர் மாவட்டம், ஹும்னாபாத்தின் மொலகெரா கிராமத்தில், நேற்று முன்தினம் மர்ம பொருள் வெடித்ததில், சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள், முதியவர் படுகாயம் அடைந்தனர். பிரிம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை, நேற்று அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, ரஹீம் கான், முன்னாள் அமைச்சர் ராஜசேகர் பாட்டீல் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது இரு அமைச்சர்களும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25,000 ரூபாய் வழங்கினர். பின், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அளித்த பேட்டி: மொலகெரா கிராமத்தில் மர்ம பொருள் வெடித்ததில் மாணவர்கள் உட்பட் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை அரசு தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளது. முதல்வருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெடிப்புக்கு காரணம் என்ன? இதற்கு பின்னால் யார் இருக்கின்றனர்? என அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இவ்விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.