மேலும் செய்திகள்
ஜூன் 5ல் அமைச்சரவை கூட்டம்
31-May-2025
பெங்களூரு: அரசு திட்ட பணிகளில், முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி. எதிர்க்கட்சியினரின் கோபத்துக்கு ஆளான காங்கிரஸ் அரசு, தற்போது வீட்டு வசதி திட்டங்களில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.கர்நாடகாவில், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு டெண்டர் அளிக்கும் போது, சமுதாய அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தது இல்லை.ஆனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, டெண்டர் பணிகளில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு, 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டை ஏற்படக்கூடாது என்பதால், சட்ட திருத்தமும் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்த சட்டத்துக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஒப்புதல்
காங்கிரஸ் அரசு, சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை தக்க வைத்து கொள்ளும் நோக்கில், இத்தகைய முடிவை எடுத்துள்ளது.குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும், முக்கியத்துவம் அளிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். மற்ற சமுதாய ஒப்பந்ததாரர்களும் ஆட்சேபித்தனர். இதை அரசு பொருட்படுத்தவில்லை.இதற்கிடையில், கர்நாடகாவில் அம்பேத்கர் வீட்டு வசதி திட்டம், ராஜிவ்காந்தி வீட்டு வசதி, முதல்வர் வீட்டு வசதி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படுகின்றன. வீட்டு வசதி திட்டங்களில், முஸ்லிம்களுக்கு ஏற்கனவே 10 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது.அதை 15 சதவீதமாக அதிகரிக்கும்படி, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், பெங்களூரின், விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.இதில் அமைச்சர் ஜமீர் அகமது கான், வீட்டு வசதி திட்டங்களில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. உத்தரவு
அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:அமைச்சரவை கூட்டத்தில், நான்கு மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கர்நாடக மக்கள் நெரிசல் கட்டுப்பாடு மசோதா - 2025, கர்நாடக தவறான தகவல் மற்றும் போலியான செய்திகள் கட்டுப்பாடு மசோதா - 2025 உட்பட, நான்கு மசோதாக்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.மசோதாக்கள் குறித்து, விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம் என, நான் கூறினேன். அடுத்த அமைச்சரவை கூட்டத்துக்கு முன், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி, மசோதாக்களை அவையின் முன் கொண்டு வர முடிவானது.மாநிலம் முழுதும் நகர் மற்றும் கிராமப்புறங்களில், வீட்டு வசதித்துறை சார்பில் செயல்படுத்தப்படும், வெவ்வேறு வீட்டு வசதி திட்டங்களில் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்தது.இதை 15 சதவீதமாக அதிகரிக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது முஸ்லிம், ஜெயின், கிறிஸ்துவர் என, அனைத்து சிறுபான்மையினருக்கும் பொருந்தும்.மத்திய அரசின் உத்தரவுகளை கவனித்து, சமூக நீதியை பின்பற்றுகிறோம். விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.வீடு கட்டி கொடுப்பதிலும், அரசியல் பேசுவோருக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது. வீடு இல்லாதோருக்கு, குடியிருப்பு வசதி செய்து தருவது அரசின் நோக்கமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:வீட்டு வசதித் துறையின் வெவ்வேறு குடியிருப்பு திட்டங்களில், 15 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க, அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசின் முடிவால் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினர் இட ஒதுக்கீட்டுக்கு, பாதிப்பு ஏற்படும்.மதம் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடும் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை மீறி காங்கிரஸ் அரசு, முடிவு செய்துள்ளது.வீட்டு வசதி திட்டங்களில், பிரதமர் ஆவாஸ் திட்டமும் வருகிறது. மாநில அரசு மற்ற சமுதாயத்தினருக்கு அநியாயம் செய்கிறது. மதம் அடிப்படையில், இட ஒதுக்கீடு அளிக்கின்றனர். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இதை நான் கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
31-May-2025