பெங்களூரு: பெங்களூரு வித்யாரண்யாபுராவை சேர்ந்த இரு மாணவியர் பி.யு.சி., முதலாவது, இரண்டாவது படித்து வந்தனர். ஜனவரி 31ம் தேதி இருவரும் கல்லுாரி சென்றனர்; வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இரு மாணவியரும் மொபைல் போனோ அல்லது ஏ.டி.எம்., கார்டோ பயன்படுத்தாததால், போலீசார் திணறினர். வழக்கு, சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அவர்களும் மூன்று மாதங்களாக விசாரித்தனர். விசாரணையின்போது, இரு மாணவியரின் செல்பி படம், சமூகவலைதளத்தில் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனாலும், அவர்கள் எங்குள்ளனர் என்பது தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் இரு மாணவியரில் ஒருவர், புதிதாக சிம் கார்டு வாங்கினார். அதற்காக தனது ஆதார் கார்டை சமர்ப்பித்திருந்தார். அதன் அடிப்படையில், பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுராவில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற சி.ஐ.டி அதிகாரிகள், இருவரையும் கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் ஒருவர், மலை மஹாதேஸ்வரா மலைக்கு சென்றபோது, கனகபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் சென்றதாக தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இளைஞரிடம் விசாரித்தபோது, 'அவர்கள் இருவரும் சகோதரிகள் என்றும், பெற்றோரை தவிர, அவர்களுக்கு யாரும் இல்லை' என்றும் தெரிவித்தனர். மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் பணியாற்றி வந்ததும், வாரத்தில் ஒரு நாள் சொந்த ஊருக்கு சென்று வருவதாகவும் கூறினர்' என்றார். அத்துடன் இருவரில் ஒருவர் கர்ப்பமாக உள்ளதை அதிகாரிகள் அறிந்தனர். இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளை, சி.ஐ.டி., அதிகாரிகள் செய்கின்றனர்.