ம.ஜ.த., மீது தந்தைக்கு வருத்தம் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா ஒப்புதல்
மைசூரு: கர்நாடகாவில் ம.ஜ.த.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜி.டி.தேவகவுடா. இவரது மகனும் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். பல்வேறு காரணங்களால் கட்சி தலைமை மீது ஜி.டி.தேவகவுடா அதிருப்தி அடைந்துள்ளார். கட்சியின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை.தன் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மட்டும் ஆஜராவார். இதனால் ம.ஜ.த., மீது அவர் அதிருப்தியில் உள்ளார் என்று தகவல் பரவியது. தன் தந்தையின் நிலைப்பாடு குறித்து அவரது மகன் ஹரிஷ் கவுடா, மைசூரில் நேற்று அளித்த பேட்டி:ம.ஜ.த., மீது, என் தந்தை ஜி.டி.தேவகவுடாவுக்கு வருத்தம் இருப்பது உண்மை தான். அதனால் தான், கட்சி விஷயங்களில் தலையிடாமல் உள்ளார். கட்சி மூத்த தலைவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.நான் ம.ஜ.த., வில் தான் இருப்பேன். காங்கிரசில் சேரும் கேள்விக்கே இடமில்லை. ம.ஜ.த., மூலம் தான், மக்கள் என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை உடைக்க மாட்டேன். எங்கள் தலைவர் குமாரசாமியை, முதல்வராக்க முயற்சிப்போம்.தேவகவுடா, குமாரசாமி போன்று கட்சியை வழிநடத்தும் திறமை, அவரது மகன் நிகிலுக்கு உள்ளது. அவரை மாநில தலைவராக்குவதில் கட்சித் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். ஆகஸ்ட் மாதம், அவர் மைசூரு வருகிறார்.மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி தேர்தலில், 100 சதவீதம் முறைகேடு நடந்துள்ளதை, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மறுதேர்தல் நடத்த நீதிமன்றத்தில் முறையிடுவோம். இவ்விஷயத்தில் அமைச்சரை ராஜினாமா செய்யுமாறு சொல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.