| ADDED : டிச 07, 2025 06:44 AM
- நமது நிருபர் - பெலகாவியின் கானாபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விட்டல் ஹலகேர். இவரது மனைவி ருக்மணி. இவர், அங்கன்வாடி பள்ளியின் ஆசிரியையாக வேலை செய்கிறார். எம்.எல்.ஏ.,வின் மனைவி அங்கன்வாடி ஆசிரியையா என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. இதுகுறித்து ருக்மணி கூறியதாவது: நான் 1987 ல் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தேன். 1991 ல் திருமணம் நடந்தது. 1992 ல் இருந்து அங்கன்வாடி பள்ளி ஆசிரியையாக வேலை செய்கிறேன். எனது கணவரும் ஆசிரியராக இருந்தவர் தான். பணி ஓய்வு பெற்று எம்.எல்.ஏ., ஆகி விட்டார். அவர் எம்.எல்.ஏ., வாக உள்ளார் என்பதால், எனது வேலையை விட வேண்டும் என்று இல்லை. எனக்கு பிடித்த வேலையை செய்கிறேன். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளியில் பணி செய்கிறேன். வீட்டிற்கு வந்ததும் அரசின் வாக்குறுதி திட்டங்கள் குறித்து, கிராமம், கிராமமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை. அங்கன்வாடிக்கு வரும் பிள்ளைகளை எனது குழந்தைகளாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். எம்.எல்.ஏ., விட்டல் ஹலகேர் கூறுகையில், ''எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்ற குறையை, அங்கன்வாடியில் படிக்கும் பிள்ளைகள் தீர்த்து வைக்கின்றனர். அவர்கள் அனைவரும் எங்கள் பிள்ளைகளை போன்றவர்கள். எனக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்த போது, எனது மனைவி ஒரு சிறுநீரகத்தை எனக்கு தானமாக வழங்கி உயிரை காப்பாற்றினார். இப்போது நான் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. பதவியில் இருக்கும் போது நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும்,'' என்றார். கவுன்சிலர்கள் மனைவியரே அதிக பில்டப் கொடுக்கும் போது, எம்.எல்.ஏ.,வின் மனைவி சாதாரண அங்கன்வாடி ஆசிரியையாக தனது பணியை செய்வது, கானாபுரா மக்களை ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது.