உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குரங்குக்கு பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாட்டம்

குரங்குக்கு பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாட்டம்

ஹாவேரி: ராணிபென்னுாரின், காகோலா கிராமத்தில் குரங்குக்கு கேக் வெட்டி, கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஊராருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் தாலுகாவின், காகோலா கிராமத்தில் வசிப்பவர் பிரபுகவுடா. நான்கு ஆண்டுகளுக்கு முன், சாலையில் ஆதரவற்று தனியாக இருந்த குரங்கு குட்டியை, பிரபுகவுடா தன் வீட்டுக்கு அழைத்து வந்து, வளர்க்க துவங்கினார். அது வந்த நாளில் இருந்து, அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. பண வசதி அதிகரித்தது.எனவே குரங்குக்கு, 'ஹனுமந்தகவுடா' என, பெயர் சூட்டி மிகவும் அன்போடு வளர்க்கின்றனர். குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போன்று ஆகிவிட்டது. பிரபுகவுடா, மஞ்சுளா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். குரங்கை இரண்டாவது மகன் போன்று பாசம் காட்டுகின்றனர்.குரங்கு வளர்ப்பதை பற்றி, ஆரம்பத்தில் கிராமத்தினர் கேலி செய்தனர். ஆனால் நாளடைவில் அவர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. அனைவரும் குரங்குடன் அன்பாக பேசி பழகுகின்றனர். தினமும் குளிப்பாட்டி, உடை அணிவிக்கின்றனர். வீட்டில் இருந்தால் ஹனுமந்தகவுடா, வீட்டை காவல் காக்கிறது. வயலுக்கு சென்றால், பயிர்களை பாதுகாக்கிறது. தினமும் வெள்ளரிக்காய், கேரட், ஆப்பிள், வாழைப்பழம் என, பலவிதமாக காய்கறிகள், பழங்கள் உண்கிறது. சப்பாத்தி என்றால், மிகவும் விரும்பி உண்கிறது. திருமணம், பெயர் சூட்டல், நிச்சயதார்த்தம் என, மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரபுகவுடா குடும்பத்தினர், குரங்கையும் அழைத்து செல்கின்றனர். ஆண்டுதோறும், குரங்கு கிடைத்த நாளை, அதன் பிறந்தநாளாக பிரபுகவுடா கொண்டாடுகிறார். நேற்று முன்தினம் குரங்கின் நான்காவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு செய்வதை போன்று, வீடு முழுதும் பலுான்களால் அலங்கரிக்கப்பட்டது. குரங்குக்கு புத்தாடை அணிவித்தனர். 2 கிலோ கேக் வரவழைக்கப்பட்டது.இதை ஹனுமந்தகவுடா கையால் வெட்ட வைத்து, அனைவருக்கும் கொடுத்தனர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, பலமான விருந்தும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி