தர்மஸ்தலாவில் 20 ஆண்டுக்கு முன் மாயமான மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாய் புகார்
மங்களூரு: தர்மஸ்தலாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகளின் எலும்புகளையாவது கண்டுபிடித்துத் தரும்படி, போலீசாரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.பெங்களூரு, பத்மநாபநகரில் வசிப்பவர் சுஜாதா பட், 60. இவர் சி.பி.ஐ.,யில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மகள் அனன்யா, மணிப்பாலின் கஸ்துார்பா மருத்துவ கல்லுாரியில் படித்தார். 2003ல், தன் 20 வயதில் தோழிகளுடன் தர்மஸ்தலாவுக்கு சென்றபோது, காணாமல் போனார்.இதுகுறித்து, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுஜாதா பட் முடிந்த வரை தேடியும், இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. மகளை இழந்து வருத்தத்தில் வாழ்கிறார். போலீசில் சரண்
சில நாட்களுக்கு முன்பு, ஒருவர் தர்மஸ்தலா போலீசாரிடம் சரண் அடைந்தார். தான் 20 ஆண்டுகளாக, பல பெண்களை பலாத்காரம் செய்து, கொன்று புதைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.இவரை நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் விசாரிக்கின்றனர். இவர் புதைத்து வைத்த உடல்களை பற்றி, தகவல் சேகரிக்கின்றனர்.இதை அறிந்த சுஜாதா பட், தட்சிண கன்னடா எஸ்.பி., அலுவலத்துக்கு நேற்று முன் தினம், வக்கீலுடன் வந்து புகார் அளித்தார். 'இந்நபர் கொலை செய்த பெண்களில், என் மகளும் ஒருவராக இருக்கக்கூடும்.'அவரது எலும்புகளையாவது மீட்டுத் தாருங்கள். பிராமணர் சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து, சுஜாதா பட் கூறியதாவது:மருத்துவ மாணவியான என் மகள் அனன்யா, 2003ல் தோழிகளுடன் தர்மஸ்தலாவுக்கு சென்று, காணாமல் போனார். அப்போது கொல்கட்டாவில் இருந்த நான், தர்மஸ்தலாவுக்கு வந்தேன். என் மகளை தேடினேன். அவர் காணாமல் போன, கோவில் வளாகம், உள்ளூர் மக்களிடம் மகளின் போட்டோவை காட்டி விசாரித்தேன்.இவ்வேளையில் சிலர், அனன்யா போன்ற தோற்றம் கொண்ட பெண்ணை, கோவில் ஊழியர் அழைத்துச் சென்றதாக கூறினார். இதுகுறித்து, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். என் புகாரை ஏற்கவில்லை.என் மகள் யாருடனோ ஓடிப்போயிருப்பார் என, தகாத வார்த்தைகளால் என்னை திட்டி, போலீஸ் நிலையத்தில் இருந்து என்னை வெளியேற்றினர்.அதன்பின் தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை தொடர்பு கொண்டேன். எந்த உதவியும் கிடைக்கவில்லை. கடத்திய கும்பல்
அன்றிரவு கோவிலின் வெளிப்பகுதியில் விரக்தியுடன் அமர்ந்திருந்தேன். அப்போது என் அருகில் வந்த நான்கு பேர், தங்களுக்கு தகவல் தெரியும் என, நம்ப வைத்து என்னை கடத்திச் சென்றனர்.கோவில் அருகில் உள்ள இருட்டறையில் இரவு முழுதும் வாயை மூடி, என்னை கட்டி வைத்திருந்தனர். மகளை பற்றி விசாரிக்காமல் திரும்பிச் செல்லும்படி மிரட்டித் தாக்கினர்.என் மண்டையில் பலமாக தாக்கியதில், மூன்று மாதங்கள் கோமாவில் இருந்தேன். தலையில் எட்டு தையல் போடப்பட்டது.அதன்பின் பெங்களூருக்கு அனுப்பினர். என் ஐ.டி., கார்டு, வங்கி ஆவணங்கள், தனிப்பட்ட பொருட்கள் காணாமல் போயின.தற்போது துப்புரவு தொழிலாளி ஒருவர், தர்மஸ்தலாவில் பல பெண்களை கொலை செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இறந்தவர்களில் என் மகளும் இருக்கலாம் என, நம்புகிறேன்.மகளின் எலும்புகளையாவது மீட்டுக் கொடுத்தால், பிராமணர் முறைப்படி சாஸ்திர, சம்பிரதாயங்கள் செய்வேன். தேவைப்பட்டால் டி.என்.ஏ., சோதனைக்கு உட்படவும் நான் தயார்.இவ்வாறு அவர் கூறினார்.