| ADDED : டிச 30, 2025 06:45 AM
மாண்டியா: துணி துவைக்க கால்வாய்க்கு சென்ற பெண்ணை, கொலை செய்த மர்ம கும்பல், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடி தப்பியோடியது. மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, பாலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜெகதீஷ், 45. இவரது மனைவி மமதா, 42. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணியளவில் கிராமத்தின் புறநகரில் உள்ள கால்வாயில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், அவரை தாக்கி கொலை செய்தது. அவர் அணிந்திருந்த தங்கச்செயின், கம்மல், மூக்குத்தியை கழற்றி, உடலை தண்ணீரில் தள்ளிவிட்டு தப்பி சென்றது. துணி துவைக்க சென்ற மனைவி, மாலையாகியும் வீட்டுக்கு வராததால், பீதியடைந்த கணவர் ஜெகதீஷ், அவரை தேடி கால்வாய்க்கு சென்றார். அங்கு மனைவியை காணவில்லை. துணிகள் மட்டும் இருந்தன. சிறிது துாரத்தில் அவரது உடல் கிடந்தது. அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. நகைக்காக கொலை நடந்திருப்பதை உணர்ந்த ஜெகதீஷ், ஸ்ரீரங்கப்பட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.