உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நகரா ஆட்டோ செயலி: தேஜஸ்வி சூர்யா பாராட்டு

நகரா ஆட்டோ செயலி: தேஜஸ்வி சூர்யா பாராட்டு

பெங்களூரு : 'நகரா' எனும் ஆட்டோ முன்பதிவு செய்யும் செயலிக்கு, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா பாராட்டு தெரிவித்து உள்ளார். பெங்களூரில் பைக் டாக்சிகள் தடை செய்யப்பட்ட பின், ஆட்டோக்களின் தேவை அதிகமானது. இதை பயன்படுத்தி, பல ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்துவருகின்றனர். அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் இருந்தாலும், பலர் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்துவோரை பார்த்தால் உலக அதிசயம் போல தோன்றும். இது போன்ற தொல்லைகளில் இருந்து தப்ப, பலரும் தங்கள் மொபல் போன்களில் உள்ள ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் ஆட்டோக்களை 'புக்கிங்' செய்து செல்கின்றனர். அதிக கமிஷன் இதை பயன்படுத்தி கொண்டு, இந்த செயலிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக அதிக கமிஷன் தொகையை பெறுகின்றன. இந்த செயலிகளுக்கு மாற்றாக, 'நகரா' எனும் செயலி கடந்த ஆண்டு அறிமுகமானது. இந்த செயலியின் மூலம் ஆட்டோ புக் செய்தால், மீட்டரில் காட்டிய தொகையை மட்டும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். இந்த செயலியில் புக்கிங் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த ஒரு கமிஷனும் செயலிக்கு தர தேவையில்லை. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதிக விளம்பரம் இல்லாததால், பலருக்கும் 'நகரா' செயலி குறித்து தெரிவதில்லை. 'எக்ஸ்' பதிவு இந்நிலையில், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா நேற்று தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெங்களூரில் மீட்டருக்கு ஏற்ப தொகை வசூலித்த ஆட்டோவில் சென்ற, பழைய இனிமையான நாட்களை நினைவு கூர்கிறேன். இந்த அழகிய நினைவுகளை நகரா செயலி எனக்கு கொடுத்து உள்ளது. இந்த செயலியின் மூலம் பயணம் செய்யும் போது, மீட்டரில் காண்பிக்கும் தொகையை செலுத்தினால் மட்டும் போதும். இது போன்ற அற்புதமான முயற்சியை எடுத்த, நிரஞ்சனர்தயா, ஷிவண்ணா ஆகிய இரண்டு இளைஞர்களுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 21, 2025 07:46

நிறைய வழிகள் இருப்பினும் நீண்ட வழியைத்தான் தேர்வு செய்து ஆட்டோக்கள் செல்கின்றன. இதனால் காட்டிய பணத்தைதான் கொடுக்க நேரிடும் சாமி.''] இத்துடன் பயணம் செய்பவர்கள் பலரும் வேண்டுமென்றே அதிக பணத்தை ஓட்டுனர்களுக்கு கொடுத்து அவர்களை அதிக பணத்துக்காக ஆசைப்பட மாற்றுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை