உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுற்றுலா பயணியரால் திணறிய நந்தி மலை

சுற்றுலா பயணியரால் திணறிய நந்தி மலை

சிக்கபல்லாபூர்: மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால், நந்தி மலையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, பலர் நுழைவு டிக்கெட் கிடைக்காமல், திரும்பி சென்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் என்றால், மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும், சுற்றுலா பயணியரால் அலை மோதும். அதுபோன்று, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை வந்தது. சிக்கபல் லாபூர் மாவட்டம், நந்தி மலைக்கு நேற்று முன்தினம் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனங்கள், கார்களில் வருகை தந்தனர். இதனால் மலையில் ஏறும் போதே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் இருந்து விடுபட்டு, உச்சியை அடைந்தால், அங்கு நுழைவு டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். டிக்கெட் கொடுக்க இரண்டு கவுன்டர்களே உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால், அங்கிருந்த ஊழியர்கள் திணறினர். டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால், சோழர் காலத்தில் கட்டப்பட்ட யோகநந்தீஸ்வரர் கோவில், பூங்கா என அனைத்து இடத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சூரிய உதயத்தை பார்ப்பதற்கு காத்திருந்தனர். ஆனால், மழை மேகமாக இருந்ததால், உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாந்தனர். பலர் குடும்பத்துடன் வந்திருந்ததால், குளிர், மழையில் நனைந்தபடி காத்திருந்தனர். சிலர், வேறு சுற்றுலா தலத்துக்கு செல்லலாம் என்று திரும்பி சென்றனர். கூட்ட நெரிசலால் சுற்றுலா பயணியர் திக்குமுக்காடினர். ' வார விடுமுறை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் பொது மக்கள் அதிகளவில் வருவர். ' அதற்கு ஏற்றபடி வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட நிர்வாகத்திற்கு இல்லை' என சுற்றுலா பயணியர் பலரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி