முதலாளி வீட்டில் திருட்டு நேபாள தம்பதிக்கு வலை
ஹெச்.ஏ.எல் : வேலை பார்த்த வீட்டில் 2 கிலோ தங்க நகைகள், 10 லட்சம் ரூபாயை திருடிய நேபாள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு, ஹெச்.ஏ.எல்., சாஸ்திரி நகரில் வசிப்பவர் ரமேஷ் பாபு, 55; தொழில் அதிபர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்ய, நேபாளத்தை சேர்ந்த ராஜ், 30, அவரது மனைவி தீபா, 26 ஆகியோரை பணிக்கு அமர்த்தினார்.கடந்த மாதம் 29 ம் தேதி இரவு ரமேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை, மொபைல் போனில் பார்க்கும் வசதி அவரிடம் இருந்தது.திருப்பதிக்கு சென்றதும் கண்காணிப்பு கேமராக்களில், பதிவான காட்சிகளை பார்க்க முயன்ற போது, மொபைல் போனில் எதுவும் தெரியவில்லை. மின்தடை ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து விட்டுவிட்டார். ராஜ், தீபாவுக்கு மொபைல் போனில் அழைத்த போது அவர்கள் எடுக்கவில்லை.இதனால் தனது நண்பர்களிடம் பேசி, வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு, படுக்கை அறை கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகை, பணம் திருட்டு போயிருந்தது. வேலைக்கார தம்பதியை காணவில்லை.நேற்று முன்தினம் இரவு திருப்பதியில் இருந்து பெங்களூரு வந்த ரமேஷ் பாபு, ஹெச்.ஏ.எல்., போலீசில் தம்பதி மீது புகார் செய்தார். தலைமறைவு தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.