பஜ்ரங் தள் பிரமுகர் கொலை என்.ஐ.ஏ., விசாரணை துவக்கம்
தட்சிண கன்னடா: பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை விசாரிக்க மங்களூரு வந்த என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம், சி.சி.பி., போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கினர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், பாசில் என்பவர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுகாஸ் ஷெட்டி, மே 1ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக, 12 பேரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.இக்கொலையில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியிருந்தது.இதையடுத்து, இவ்வழக்கை விசாரணை நடத்தும்படி என்.ஐ.ஏ.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான கடிதம், கர்நாடக அரசுக்கும் அனுப்பப்பட்டது.இம்மாதம் 8ம் தேதி, இவ்வழக்கு என்.ஐ.ஏ.,விடம் மாநில அரசு ஒப்படைத்தது. நேற்று காலை என்.ஐ.ஏ., - டி.சி.பி., பவன் குமார் தலைமையிலான குழுவினர் மங்களூரு வந்தனர்.இவ்வழக்கை விசாரித்து வந்த சி.சி.பி., அதிகாரிகளிடம், தகவல்களையும், ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். விசாரணையை துவக்கி உள்ளனர். இதை நகர போலீஸ் கமிஷனர் சுதிர் குமார் ரெட்டி உறுதி செய்துள்ளார்.