பிரியாணி இல்லை... கோழிக்கறி பெங்களூரு மாநகராட்சி விளக்கம்
பெங்களூரு : தெரு நாய்களுக்கு பிரியாணி வழங்குவதா என எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 'பிரியாணி இல்லை, கோழிக்கறி உண்டு' என பெங்களூரு மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது.பெங்களூரில் தெரு நாய்களுக்கு கோழிக்கறி, முட்டையுடன் கூடிய உணவு வழங்க உள்ளதாக மாநகராட்சி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மிகவும் பிரபலமானது. அதே சமயம், சாலையோரங்களில் பலரும் பசியுடன் இருக்கும் போது, தெரு நாய்களுக்கு பிரியாணி வழங்குவதா என சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியது.இது குறித்து, மாநகராட்சியின் கால்நடை பராமரிப்பு துறை சிறப்பு கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரு மாநகராட்சியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது குறித்து, நன்கு ஆராயப்பட்ட பிறகே முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில், தெரு நாய்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்தே திட்டம் உருவாக்கப்பட்டது. கருத்தடை
இத்திட்டத்திற்காக 2.88 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் உள்ள உணவு உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதன் மூலம், நாய்கள் மனிதர்களை கடிப்பது குறையும். மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடிப்பதும் சுலபமாகும். நாய்களுக்கு கருத்தடை, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போன்றவற்றை செய்ய முடியும்.மாநகராட்சியில் உள்ள 2.7 லட்சம் நாய்களில், உணவின்றி பட்டினியால் வாடும் 4,000 நாய்களுக்கு மட்டுமே தினமும் ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் 100 உணவளிக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 500 நாய்களுக்கு உணவு வழங்கப்படும். 19 ரூபாய்
நாய்களுக்கு ஒரு வேளை வழங்கப்படும் உணவின் மதிப்பு 19 ரூபாய். இதில் 8 ரூபாய் போக்குவரத்து, உணவு வழங்கல் மற்றும் இதர காரணங்களுக்கும்; மீதமுள்ள 11 ரூபாய் உணவை தயாரிக்கும் செலவு. இதில், கோழிக்கறி, காய்கறிகளும் அடங்கும். கோழிக்கறி வழங்கப்படும். ஆனால், பிரியாணி கிடையாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.