உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தடையில்லை! இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குறுதி திட்டங்களுக்கு...

 தடையில்லை! இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குறுதி திட்டங்களுக்கு...

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க, 'சக்தி' திட்டம்; 200 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால், கட்டணம் கிடையாது என்ற, 'கிரஹஜோதி' திட்டம்; குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும், 'கிரஹ லட்சுமி' திட்டம்; 10 கிலோ இலவச அரிசி வழங்கும் 'அன்னபாக்யா' திட்டம்; வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும், 'யுவநிதி' திட்டம் என்ற ஐந்து வாக்குறுதிகளை, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. அரசின் இந்த திட்டங்களுக்கு, மக்களிடம் பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு ஆதாரமாக, 2024ல் காலியான சன்னபட்டணா, ஷிகான், சண்டூர் சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வின் ஷிகான், ம.ஜ.த.,வின் சன்னபட்டணா என, இரு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. வழக்கமாக இடைத்தேர் தல் நடந்தால், ஆளும் கட்சிகள் தான் வெற்றி பெறும். ஆனாலும், இம்முறை தங்களின் வாக்குறுதி திட்டத்தால் தான் வெற்றி கிடைத்ததாக, காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளோ, 'இடைத்தேர்தலின் போது, நிலுவையில் இருந்த கிரஹலட்சுமி திட்டத்தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது' என, குற்றம்சாட்டின. மனு இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஷாமனுார் சிவசங்கரப்பா மற்றும் மேட்டி மறைவால் தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் தொகுதிகளுக்கு வரும், 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தருணத்தில், தாவணகெரே தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கவுதம் குமார் ஜெயின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'வாக்குறுதி திட்டங்களின் ஒரு பகுதியாக வழங்கப்பட வேண்டிய பணம், கடந்த ஆறேழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இடைத்தேர்தலை மையமாக கொண்டு, வாக்காளர்களை கவரும் வகையில், நிலுவை தொகையை ஒரே தவணையாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி சச்சின் சங்கர் மகடும் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிட்டதாவது: வாக்குறுதி திட்டங்களுக்கான நிதியுதவி, கடந்த ஆறேழு மாதங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், விண்ணப்பதாருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பிப்ரவரி மாதம் வரை அனைத்து தொகையும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தும் ஆவணத்தை நான் சமர்ப்பிக்கிறேன். இதில், ஓரிரு மாதங்கள் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.தேர்தல் ஆணையம் என்பது, 'பல் பிடுங்கப்பட்ட பாம்பு அல்ல'. நாம் விதிமுறைகளை மீறினால், அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பர். அதிகாரம் உண்டு தாவணகெரே மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில், யுவநிதி திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2,500 முதல் 4,000 பேர் மட்டுமே உள்ளனர். பாகல்கோட், தாவணகெரே உட்பட மூன்று மாவட்டங்களில் கிரஹலட்சுமி திட்ட பயனாளிகள், மொத்தம், 58,000 பேர் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் வருவதற்கு அமலுக்கு முன்னரே, இவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். எனவே, அவர்களுக்கு நிதி வழங்குவது தொடர வேண்டும். இம்மனு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. இம்மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார். மனுதாரர் கவுதம் குமார் ஜெயின் தரப்பு வக்கீல், அருண் ஷியாம் வாதிட்டதாவது: கிரஹலட்சுமி, அன்ன பாக்யா, யுவநிதி திட்டங்களை அரசு முறையாக செயல்படுத்தவில்லை. அன்னபாக்யா திட்ட பயன்களை, கடந்த ஆறு மாதங்களாக பயனாளிகளுக்கு வழங்கவில்லை. பயனாளிகளுக்கு நிதியை விடுவிப்பதற்கு முன், அரசு தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெறவில்லை. தேர்தல் முடிவடையும் வரை, இந்த நிதியை விடுவிக்க கூடாது என்பதே எங்களின் கோரிக்கை. 'இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமானவை' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கிரஹலட்சுமி திட்டத்துக்கான நிதி, மார்ச், 23ம் தேதி விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னரே, அந்த நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் இடைத்தேர்தல்கள் நடக்கிறதோ, அந்த மாவட்டங்களில் நிதியை விடுவிக்க தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், அரசு பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. உதாரணமாக, பாகல்கோட் மாவட்டத்தில் ஜனவரி 2026ல் பயனாளிகளின் எண்ணிக்கை 3,75,268 ஆக இருந்தது. ஆனால், 25.03.2026 ல், 3,76,001 ஆக உயர்ந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தடைக்கு மறுப்பு இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி சச்சின் சங்கம் மகடும் கூறுகையில், ''இத்திட்டம் முதன் முறையாக இப்போது அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே, பயனாளிகள் பலனை அனுபவித்து வருகின்றனர். நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவும், இறுதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களையே பாதிக்கும். மாநில அரசு, இத்திட்டத்தை செயல்படுத்தியதுடன், அதனை தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறது. ''நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, இம்மனு மீது இடைக்கால தடை விதிக்க முடியாது. இம்மனு மீது விரிவான அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும் ' ' என்று கூறி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை