உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெங்களூரு : ''சிறார்களுக்கு புற்றுநோய் அதிகரிக்கிறது. கித்வாய் மருத்துவமனையில் கடந்தாண்டு 601 சிறார்கள் அனுமதிக்கப்பட்டனர்,'' என கித்வாய் புற்று நோய் மருத்துவமனை இயக்குநர் நவீன் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: சிறார்களுக்கு ஏதாவது கட்டி, நோய் அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்தால், குணப்படுத்த முடியும். தாமதமாக பரிசோதனை நடத்தி, சிகிச்சை அளித்தால் நோய் தீவிரமாகும். கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், கித்வாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். கித்வாயில் 16 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் கண்டுபிடிக்கப்பட்ட பின், சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சேர்ப்பது முக்கியம். சிகிச்சையை துவங்கிய பின், வயதானவர்களை விட, சிறார்கள் விரைவில் குணமடைகின்றனர். வயதானவர்களுக்கும், சிறார்களுக்கும் வேறு வேறு சிகிச்சை தேவை. புற்றுநோய் குறித்து, மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளை விரட்ட வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. கித்வாய் மருத்துவமனையில் கடந்தாண்டு 601 சிறார்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி