உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வனப்பகுதியில் கிரிக்கெட் போட்டி விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு

 வனப்பகுதியில் கிரிக்கெட் போட்டி விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவு

நாகரஹொளே: நாகரஹொளே வனப்பகுதியில், இரண்டு நாட்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதர்கள், வன விலங்குகள் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். ஆனாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இச்சூழ்நிலையில், நாகரஹொளே தேசிய பூங்காவில், இரண்டு நாட்கள் சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டி நடத்தியது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவின் நாகரஹொளே தேசிய பூங்காவின் நாநாச்சி கேட் அருகில் இம்மாதம் 19 மற்றும் 20ம் தேதி என, இரண்டு நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக அதிகமான மரம், செடி, கொடிகளை அகற்றியுள்ளனர். போட்டியை பார்க்க வந்தோர், தங்களின் வாகனங்களை பூங்காவை சுற்றிலும் நிறுத்தி உள்ளனர்; திறந்தவெளியில் சாப்பிட்டு உள்ளனர். கிரிக்கெட் போட்டி நடந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. வனப்பகுதிகளை பாழாக்கும் எந்த பணிகளையும் நடத்த கூடாது என, அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகரஹொளே தேசிய பூங்காவில், கிரிக்கெட் போட்டியை நடத்தி செய்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். விளையாட்டு வீடியோவை கவனித்த, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, வன பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு, கடிதம் எழுதியுள்ளார். நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். நாகரஹொளே புலிகள் சரணாலய இயக்குநர் சீமா கூறியதாவது: வனப்பகுதியில் உள்ள குக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த இடம் சபாரி பாயின்ட் அருகில் உள்ளது. 10 ஆண்டுகளாக, கிரிக்கெட் விளையாடுகின்றனர். 2015லிருந்து இப்பகுதியில், எந்த மரங்களும் வெட்டப்படவில்லை. மரம் வெட்ட அனுமதியும் அளிக்கவில்லை. மனிதர்கள், விலங்குகள் இடையிலான மோதல் அதிகரிப்பதால், பழங்குடியினர், வனப்பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்