உங்களை எதிர்க்கட்சியினர் கண்காணிக்கின்றனர்: அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை
பெங்களூரு: ‘‘தனியார் ஏஜன்சிகள் மூலம் உங்களை, எதிர்க்கட்சியினர் உளவு பார்க்கின்றனர். எச்சரிக்கையாக இருங்கள்,’’ என, அமைச்சர்களுக்கு, முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் சிவகுமார் தலைமையில், பெங்களூரில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது சில அமைச்சர்கள் பெயர்களை கூறிய முதல்வர், தனியார் ஏஜன்சிகள் மூலம், நீங்கள் எங்கு செல்கிறீர்கள்; யாரை சந்திக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட விஷயங்களை, எதிர்க்கட்சியினர் ரகசியமாக உளவு பார்க்கின்றனர். கைதேர்ந்த கட்சி
இதுபற்றி உளவுத்துறையிடம் இருந்து எனக்கு தகவல் வந்துள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறினார். இதை கேட்டு அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் கொடுத்த எச்சரிக்கை, உள்ளூர் செய்திகளில் நேற்று வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் விடுத்த எச்சரிக்கைக்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ‘‘ரகசியமாக உளவு பார்ப்பதில் காங்கிரஸ் தான் கைதேர்ந்த கட்சி. திருடர்களுக்கு தான் மனதில் எப்போதும் பயம் இருந்து கொண்டே இருக்கும்,’’ என்றார். பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ‘‘ரகசிய உளவு பார்ப்பது தான் காங்கிரசின் பாரம்பரியம். யார், யாரை உளவு பார்க்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்டாலே தெரிந்து விடும்,’’ என்றார். முன்னாள் அமைச்சர் ரவி கூறுகையில், ‘‘நான் மக்கள் பணத்தை சாப்பிடுகிறேன். ஆனால், சிக்கிக் கொள்ளவில்லை. நீங்களும் சாப்பிடுங்கள்; ஆனால், சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று, முதல்வர், அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்,’’ என்றார். சித்துவுக்கு எதிராக சதி
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியதாவது: ஒரு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, சிவகுமார் ரகசியமாக உளவு பார்த்தார். சித்தராமையாவை பற்றிய சில தகவல்களை, கட்சி மேலிடத்திடம் அறிக்கையாக கொடுத்தே, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து சிவகுமார் நீக்கியுள்ளார். இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசி கொள்கின்றனர். சித்தராமையா எதிராக திட்டமிட்ட சதி நடந்தது. ராஜண்ணா, ரமேஷ் ஜார்கிஹோளி அரசியல்ரீதியாக எப்படி காலி செய்யப்பட்டனர் என்று அனைவருக்கும் தெரியும். அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் உளவு பார்ப்பதாக எங்கள் மீது அபத்தமான குற்றச்சாட்டு கூறுகிறார். இவ்வாறு கூறினார்.