ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்க செயலர் மரணம்
பெங்களூரு: ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்க செயலர் ஏ.எஸ்.லட்சுமண் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல சங்கங்கள், அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன. பெங்களூரு ஆஸ்பார்ன் ரோட்டில் உள்ள முதலியார் சங்க செயலர் ஏ.எஸ்.லட்சுமண், 64. நேற்று காலையில் வசந்தநகரில் உள்ள அவரது இல்லத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், மல்லேஸ்வரம் 14 வது ஏ கிராஸ் வெஸ்ட் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 2.30 மணிக்கு முதலியார் சங்கத்தின் முன்புறம், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். 3:00 மணிக்கு கல்பள்ளி இடுகாட்டில் இறுதி சடங்கு நடக்கிறது. கடந்த 1988 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை, முதலியார் சங்கத்தின் செயலராக பணியாற்றிய லட்சுமண், தனது வாழ்க்கை முழுதும் சங்க மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தவர். சங்கத்தின் சார்பில் நடக்கும் ‘திருமண வரன்’ நிகழ்ச்சிகளை திறம்பட ஒருங்கிணைத்து நடத்தியவர். இவரது மறைவுக்கு சங்க தலைவர் பிரகாஷ் பழனி, பெங்களூரு தமிழ் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவி புவனேஸ்வரி, மகள் அர்ச்சனா, மருமகன் பவன்குமார், பேரன் துருவா உள்ளனர்.