உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஸ்ட்ரெச்சரின் வீல் உடைந்து கீழே விழுந்த நோயாளி

ஸ்ட்ரெச்சரின் வீல் உடைந்து கீழே விழுந்த நோயாளி

பெங்களூரு : விக்டோரியா மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வீல் உடைந்ததில், நோயாளி கீழே விழுந்து வலியால் துடித்தது, பர பரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனைகள் என்றால், மக்கள் முகத்தை சுழிக்கின்றனர். ஏழைகள், நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனையை நம்பியுள்ளனர். மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதாக, பெருமை பேசும் மாநில அரசு, நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், அலட்சியம் காட்டுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில், மருந்துகள் பற்றாக்குறை, அசுத்தமான சூழ்நிலை, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது போன்ற பல பிரச்னைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ளன. நோயாளிகளுக்கு தேவையான ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலிகளும் இல்லை. நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்ல, சக்கர நாற்காலி இல்லாமல் உறவினர்களே தோளில் தூக்கி செல்லும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், நேற்று மாலை நோயாளி ஒருவரை, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, பரிசோதனைக்காக ஸ்கேனிங் யூனிட்டுக்கு ஊழியர் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ட்ரெச்சரின் சக்கரம் உடைந்ததில், நோயாளி நழுவி கீழே விழுந்து, வலியால் துடித்தார். அதன்பின் வேறு ஸ்ட்ரெச்சரில் நோயாளியை அழைத்து சென்றனர். நோயாளி கீழே விழுந்து தவிப்பதை கண்ட சிலர், தங்களின் மொபைல் போனில் இதை பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பலரும் இந்த சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் உயிருக்கு மதிப்பில்லையா' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை