பெங்., சாலைகளில் அலுவலக நேரத்தில் வருகிறது மாற்றம்
பெங்களூரு: பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அலுவலக நேரத்தில் மாற்றம் செய்யலாம் என்று, பிரதமர் மோடி ஆலோசனை கூறியதாக, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போரால் அங்கிருந்து தார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்னை சரியாகி உள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் சாலை பள்ளங்களை முழுமையாக மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். மொத்தமுள்ள 2,875 கி.மீ., துார சாலையில் 553 கி.மீ., சாலைகளில் பள்ளம் மூடும் பணி முடிந்துள்ளது. பிரதமர் மோடி பெங்களூரு வந்த போது அவரிடம், ஹெப்பால் – சர்ஜாபூர் மெட்ரோ சேவை சமர்ப்பிக்கப்பட்ட, விரிவான திட்ட அறிக்கைக்கு, மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்றும், அங்கு மெட்ரோ ரயில் இயங்கினால் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எடுத்து கூறினோம். இதை கேட்ட பிரதமர், மெட்ரோ ரயில்கள் இயக்கினால் மட்டும் போக்குவரத்து நெரிசல் குறையாது; வெளிவட்ட சாலைகளில் உள்ள அலுவலங்களில் நேரத்தை மாற்ற வேண்டும். இரவில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்; தேவையான வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று எங்களுக்கு ஆலோசனை கூறினார். இதனை நாங்களும் ஏற்று கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.