காங்., - எம்.எல்.ஏ., மீது பல்லாரி மக்கள் அதிருப்தி
பல்லாரி : சட்டசபை கூட்டத்தில் தன் தொகுதி தொடர்பாக, ஒரு கேள்வி கூட கேட்காத, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது, பல்லாரி நகர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பா.ஜ.,வின் கோட்டை என அழைக்கப்படும், பல்லாரி நகர தொகுதியில் 2023ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பரத் ரெட்டி, 35, வெற்றி பெற்றார். இதுவரை யாரும் வாங்காத வகையில் 86,440 ஓட்டுகள் பெற்று, 37,863 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பரத் ரெட்டி இளைஞர், தொகுதிக்காக நிறைய மேம்பாட்டுப் பணிகள் செய்வார் என்று நம்பி, அவரை மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால் தொழில் அதிபரான பரத் ரெட்டிக்கு, தன் தொழில்களை கவனிக்கவே நேரம் இல்லை. பெங்களூரு, பெலகாவியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்களில் பெரும்பாலான நாட்கள் அவர் கலந்து கொள்வதே இல்லை. கடந்த 11ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை, பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த கூட்டத்தொடரிலும் ஓரிரு நாட்களே கலந்து கொண்டார். அதிலும் தன் தொகுதி தொடர்பாக, அவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஏதோ கடமைக்கு வந்தோம், சென்றோம் என்பது போல இருந்தது அவரது செயல்பாடு. இதனால் பரத் ரெட்டி மீது, பல்லாரி நகர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.