உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விவாகரத்து பெற்ற பின் கணவர், குழந்தையுடன் மீண்டும் வாழ விரும்பிய பேராசிரியை மனு தள்ளுபடி

 விவாகரத்து பெற்ற பின் கணவர், குழந்தையுடன் மீண்டும் வாழ விரும்பிய பேராசிரியை மனு தள்ளுபடி

பெங்களூரு: விவாகரத்து பெற்ற பின், கணவர், குழந்தையுடன் மீண்டும் வாழ ஆசைப்பட்டு, அதற்கு அனுமதி கோரி உதவி பேராசிரியை தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹாவேரியில் பொறியாளராக பணியாற்றும் நபருக்கும், தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றும் பெண்ணுக்கும், 2011ல் திருமணம் நடந்தது. தம்பதி பெங்களூரில் வசித்தனர். மனைவிக்கு கணவர் வீட்டினரை பிடிக்கவில்லை. தகாத வார்த்தைகளால் அடிக்கடி திட்டுவார். வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. இதனால், தம்பதிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு முறை மார்க்கெட்டில், கணவரின் சட்டை காலரை பிடித்து இழுத்தும் அவமதித்தார். இதற்கிடையே கர்ப்பமடைந்த மனைவி, பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு சென்றார். 2012ல் பெண் குழந்தை பிறந்தது. அதையும் சரியாக பராமரிக்கவில்லை. குழந்தையை பார்க்க கணவரும், குடும்பத்தினரும் மனைவியின் வீட்டுக்கு சென்ற போது, குழந்தைக்கு அசுத்தமான, சிறுநீர் நாற்றம் வீசும் உடையை அணிவித்திருந்தார். இதைப்பற்றி கேள்வி எழுப்பிய கணவர் வீட்டினரை திட்டவும் செய்தார். குழந்தைக்கு இரண்டு வயதான போது, அதை கணவர் வீட்டிலேயே விட்டு விட்டு, மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்றார். கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, மகளிர் ஆறுதல் மையத்தில் சமாதான பேச்சு நடந்த போது, கணவருடன் வாழவோ, மகளை வளர்க்கவோ தனக்கு விருப்பம் இல்லை எனக்கூறி குழந்தையை கணவரிடம் ஒப்படைப்பதாக, எழுதி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றார். இதையடுத்து, 2016ல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மனைவிக்கு மாதந்தோறும், 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி கணவருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மகள் மீதான உரிமைகளை தனக்கு அளிக்கும்படி கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: கணவரையும், குழந்தையையும் விட்டு விலகிய பின், பல முறை சமாதான பேச்சு நடந்துள்ளது. அப்போது, கணவருடன் வாழவோ, குழந்தையை தன் வசம் பெறவோ மனுதாரர் முயற்சிக்கவில்லை. கணவர் வீட்டிற்கு செல்லவும் மறுத்துள்ளார். பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியது, கணவரின் பெற்றோரை பிசாசுகள் என, திட்டியதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன. கடந்த, 2014ல் இருந்து தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இரண்டு வயது குழந்தையாக இருந்த போது, மகளை உதறிவிட்டு சென்ற இவர், மகளுக்கு, 13 வயதான நிலையில், அவரை வளர்க்கும் உரிமையை கோருகிறார். இந்த அம்சங்களை கவனிக்கும் போது, மனைவியின் நடத்தையில் நேர்மை தெரியவில்லை. தற்போது இவர்களின் மகள், தன் தந்தை மற்றும் அவரது பெற்றோருடன் வளர்கிறார். அவர்கள் குழந்தையை வளர்க்க தகுதியற்றவர்கள் என்பதற்கான, எந்த ஆதாரங்களையும் மனைவி வழங்கவில்லை. எனவே குழந்தை தன் தந்தையுடன் இருப்பது சட்ட மீறல் ஆகாது. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனைவியின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி