உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயில் கட்டண உயர்வு எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

மெட்ரோ ரயில் கட்டண உயர்வு எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பெங்களூரு : 'நம்ம மெட்ரோ' ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெங்களூரின் சனத் குமார் ஷெட்டி, சைதன்யா சுப்ரமண்யா, சேத்தன் கனிரிகா ஆகியோர் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மெட்ரோ ரயில் கட்டணத்தை 25 சதவீதத்துக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே அவர்கள் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், 71 சதவீதம் உயர்த்தி, அறிவித்துள்ளது சட்ட விரோதம்' என்றார்.நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:மெட்ரோ ரயில் செயல்பாடு, பராமரிப்பு சட்டம் 2002ன்படி, கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி அளிக்கிறது. அதே சட்டத்தின் கீழ், கட்டண உயர்வும் அமல்படுத்த வழி செய்கிறது.அவ்வப்போது மெட்ரோ கட்டணத்தை உயர்த்த, மெட்ரோ நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக, கட்டண நிர்ணய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைபடியே கட்டணம் உயர்த்தப்படுகிறது.கட்டண உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, பரிந்துரை செய்துள்ளது. இத்தகைய நிபுணர்களின் உத்தரவுகளை மறுபரிசீலனை செய்ய, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.கட்டண உயர்வு தொடர்பாக, கமிட்டியின் அறிக்கையை பரிசீலிப்பது சிறந்த முடிவு. சட்ட மீறல் நடந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். வேறு எந்த முடிவிலும் தலையிட நீதிமன்றத்துக்கு அனுமதியில்லை.சட்டத்தை மீறி மெட்ரோ கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மெட்ரோ நிர்வாகம் வாக்குறுதியை மீறியுள்ளது என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. தவறான புரிதலால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ