மாநில கல்வி கொள்கைக்கு தடை கோரிய மனு: ஐகோர்ட் தள்ளுபடி
பெங்களூரு: மாநில கல்வி கொள்கைக்கு தடை விதிக்க கோரிய மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த து. மத்திய அரசின் என்.இ.பி., எனும் தேசிய கல்வி கொள்கையை, கடந்த பா.ஜ., அரசு அமல்படுத்தியது. ஆனால், மாநிலத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு, எஸ்.இ.பி., எனும் மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த தி ட்டமிட்டது. இதற்கு எதிராக, வக்கீல்கள் கிரிஷ் பரத்வாஜ், அனந்தமூர்த்தி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ராமசந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'நாடு முழுதும் ஒரே கல்வி கொள்கை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மிகவும் சிரமப்பட்டு மத்திய அரசு, என்.இ.பி., கொள்கையை அமல்படுத்தியது. இதை, முந்தைய மாநில அரசு அமல்படுத்தியது. இதற்காக சிறப்பு நிதியும் வழங்கப்படுகிறது. மக்களின் வரிப்பணம் இதற்காக செலவழிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமலில் இருப்பதை, மாநில அரசு தடுக்க முயற்சிக்கிறது' என்றார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'மாநில அரசு கொள்கையை வகுக்க, நிபுணர் குழுவை அமைத்திருக்கும்போது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரரின் அடிப்படை உரிமை அல்லது சட்ட உரிமை மீறப்பட்டால் மட்டுமே, அரசியலமைப்பின் 226வது பிரிவை பயன்படுத்த முடியும். இல்லையெனில், அவரது உரிமையை பயன்படுத்த முடியாது. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.