உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொய் புகாரில் பதிவான போக்சோ வழக்கு ரத்து

பொய் புகாரில் பதிவான போக்சோ வழக்கு ரத்து

பெங்களூரு: சொத்து தொடர்பாக பழிவாங்கும் நோக்கில், சகோதரர்களுக்கு எதிராக, அவர்களின் சகோதரி பதிவு செய்த போக்சோ வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.பெங்களூரு கே.ஆர்.,புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு பெண் இறந்த பின், அவரின் சொத்துகள் தொடர்பாக, இரு மகன்கள், ஒரு மகள் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

பாலியல் புகார்

கடந்தாண்டு மே 18 ம் தேதி, கே.ஆர்.,புரம் போலீஸ் நிலையத்தில், 'என் மகனும், மைனரான மகளும் வெளியே சென்றிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் எனது சகோதரர்கள் இருவரும் வழி மறித்து கீழே தள்ளி கொலை செய்யவும், என் மகளை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளனர் என்று சகோதரி ஒருவர் புகார் செய்திருந்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.இந்த எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட இரு சகோதரர்களும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணை நடந்து வந்தது.விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'சொத்து பிரச்னை தொடர்பாக எங்களுக்கும், எங்கள் சகோதரிக்கும் இடையேயான விசாரணை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சொத்து தொடர்பான பிரச்னையால் தான், பழிவாங்கும் நோக்கில், மனுதாரர்கள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய வேண்டும்' என்றார்.புகார்தாரர் சார்பு வக்கீல் வாதிடுகையில், 'வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யகூடாது. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

நீதிபதி தீர்ப்பு

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, நேற்று தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.நேற்று நீதிபதி அளித்த தீர்ப்பு:மனுதாரரும், புகார்தாரரும் உடன் பிறந்தவர்கள். சொத்து பிரச்னை தொடர்பாக, இவர்கள் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, பழிவாங்கும் நோக்கில் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.உச்ச நீதிமன்றமும், 'வழக்கு பதிவு செய்வதற்கான அனைத்து காரணங்களையும் ஆராய வேண்டும். பழிவாங்கும் நோக்கிலும், தனிப்பட்ட விரோதத்திலும் சில புகார்கள் பதிவு செய்யப்படும். இத்தகைய நேரத்தில், நீதிமன்றம் தலையிட்டு, வழக்கு பதிவை ரத்து செய்யலாம்' என்று கூறியுள்ளது.எனவே, சகோதரர்கள் மீது சகோதரி தொடர்ந்த இவ்வழக்கை விசாரணைக்கு அனுமதிப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, 'போக்சோ' வழக்கு பதிவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !