போர் குறித்து வதந்தி போலீஸ் எச்சரிக்கை
பெங்களூரு: “போர் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தாயனந்தா கூறினார்.பெங்களூரு, ஆடுகோடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பாகிஸ்தான் எல்லையில் நிலவும் போர் சூழல் காரணமாக பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நெறிமுறைகள் மக்கள் பின்பற்ற வேண்டும்.போர் ஒத்திகை நிகழ்ச்சிகள் குறித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போர்க்காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரிக்கும். எனவே, இதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.போர்க்காலங்களில் மக்களுக்கு சரியான தகவல்கள் வழங்க வேண்டும். எனவே, நகரங்களில் உள்ள போலீஸ் துணை கமிஷனர்கள், போர் குறித்து தகவல்களை முதலில் சரிபார்க்க வேண்டும். இதன்பின், சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.மேலும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.