உல்லாசத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய தனியார் ஊழியர் கைது
ஒயிட்பீல்டு: நட்பாக பழகிய நிலையில், உல்லாசத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய, தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். பெங்களூரு ஒயிட்பீல்டில் பி.ஜி., எனும் தங்கும் விடுதியில் தங்கியிருந்து, தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்கிறார். இந்த விடுதியின் அருகே ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஆந்திராவை சேர்ந்தவரும், தனியார் நிறுவன ஊழியருமான பாபு, 30, தங்கி இருந்தார். பக்கத்து விடுதிகளில் வசிப்பதால் இளம்பெண்ணுக்கும், பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாபுவுடன், இளம்பெண் நட்பாக பழகினார். இருவரும் தினமும் மொபைல் போனிலும் பேசினர். 17ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, இளம்பெண் தங்கியுள்ள அறைக்கு பாபு சென்றார். துாங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை எழுப்பி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உல்லாசத்திற்கு மறுத்ததுடன், அறையில் இருந்து வெளியேறும்படிகூறினார். கோபம் அடைந்த பாபு, இளம்பெண்ணை மொபைல் போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்தார். புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க 70,000 ரூபாய் தரும்படி கேட்டார். 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' என, இளம்பெண் கூறினார். அவரது மொபைல் போனை பறித்த வாலிபர், அதில் இருந்து 14,000 ரூபாயை தன் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். பின், மீண்டும் ஒரு முறை இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்தார். இளம்பெண் மறுத்ததால் அவரது முதுகில் கத்தியால் குத்திவிட்டு பாபு தப்பினார். இளம்பெண்ணை, விடுதி ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இளம்பெண் அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த பாபுவை, நேற்று முன்தினம் இரவு ஒயிட்பீல்டு போலீசார் கைது செய்தனர். பாபுவுக்கு ஏற்கனவே திருமணமானதும் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வசித்ததும் தெரிய வந்துள்ளது.