பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்கும் புஷ்பலதா
– நமது நிருபர் – தாவணகெரே தாலுகா, மல்லஷெட்டிஹள்ளி கிராமத்தில், சாதனா என்ற பெயரில் முதியோர் இல்லம் மற்றும் அனாதை ஆசிரமம் இயங்குகிறது. இதன் நிறுவனராக இருப்பவர் புஷ்பலதா பவித்ரராஜ். முதியோர் இல்லம் மற்றும் அனாதை ஆசிரமத்தில் தற்போது, 100க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளை, தாயாக இருந்து புஷ்பலதா அரவணைத்து வருகிறார். புஷ்பலதா கூறியதாவது: இன்றைய காலத்தில் பெண் குழந்தை பிறந்தால், வீடுகளில் கொண்டாடுகின்றனர். ஆனால், முந்தைய காலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தாலே அதன் பெற்றோர் ஏதோ தவறு செய்து விட்டதைப் போல ஏளனமாகப் பார்த்தனர். எனது பெற்றோருக்கு நான் உட்பட 3 பெண் குழந்தைகள். உறவினர்கள், எனது பெற்றோரை கேலி, கிண்டல் செய்தனர். நிறைய அவமானங்களைச் சந்தித்து தான் பெற்றோர் எங்களை வளர்த்தனர். அரசு பள்ளியில் தான் படித்தோம். கல்லுாரி முடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றிய போது தான், முதியோர் இல்லம் மற்றும் அனாதை ஆசிரமம் துவங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார் சுவாமிகள் புகைப்படத்தை வைத்து பூஜித்து ஆசிரமம் துவக்கினேன். தற்போது, அனாதை ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர், 70க்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்த பிள்ளைகள் உள்ளனர். அந்த பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறோம். பிள்ளைகள் என்னை, அம்மா என்றே அழைக்கின்றனர். அரசிடம் இருந்து நிதி வாங்குவது இல்லை. சொந்த பணம், யாராவது அன்பளிப்பாக வழங்கும் பணத்தில் தான், ஆசிரமம் நடத்துகிறோம். மல்லஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஏழைப் பெண்கள், கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்க்கையில் முன்னேற, எனது சொந்த செலவில் தையல் பயிற்சி அளிக்கிறேன். எனக்கு நிறைய அமைப்புகளிடம் இருந்து விருது கிடைத்துள்ளன. ஆனாலும் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள், அம்மா என்று அழைப்பதே எனக்கு கிடைத்துள்ள உண்மையான விருதாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.