மீண்டும் அமைச்சர் பதவியை பெற ராகுலுக்கு ராஜண்ணா ஐஸ் கடிதம்
- நமது நிருபர் -:கர் நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜண்ணா. இவர், சில மாதங்களுக்கு முன், கட்சி மேலிடம் குறித்து விமர்சனம் செய்ததால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பறிபோன பதவியை மீண்டும் கைப்பற்ற முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ராகுல், சோனியா குறித்தும் புகழ்ந்து தள்ளுகிறார். இவரை தன் பக்கம் இழுக்க துணை முதல்வர் சிவகுமார் காய் நகர்த்தி வருகிறார் என்பது வேறு கதை. கட்சி மேலிடம் குறித்து பேசியவை பற்றி விளக்கும் வகையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, ராஜண்ணா கடந்த மாதம் 17ம் தேதி கடிதம் எழுதினார். இந்த கடிதம், தற்போது பொது வெளியில் வெளியாகி உள்ளது. கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: 'ஓட்டு மோசடி' பிரசாரத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். ஓட்டு மோசடி குறித்து, நான் பேசிய கருத்துக்கள் தவறாக திரித்து வெளியிடப்பட்டு உள்ளன. நான் கூறிய கருத்துக்களை, சிலர் வேண்டுமென்றே தங்களிடம் தவறாக கூறி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை தேர்தலின் போது, மாநில காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட பூத் ஏஜென்டுகள், தங்கள் பணியை ஒழுங்காக செய்யவில்லை. ஒரு வேளை அவர்கள் ஒழுங்காக பணி செய்திருந்தால், தேர்தலில் கூடுதலாக, 10 தொகுதிகளை நி ச்சயமாக வென்று இருக்கலாம் . இவ்விஷயத்தில் மாநில தலைவர் சிவகுமார் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இதுபோன்ற தவறுகளால், மற்ற மாநிலங்களிலும் பல தொகுதிகளில் தோல்வியை பெற்றோம். தேர்தலின் உண்மை நிலவரத்தை தங்கள் முன் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இதை தெரிவிக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.