உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ.,வில் இணைகிறார் ராஜண்ணா காங்., - எம்.எல்.ஏ., திடுக் தகவல்

பா.ஜ.,வில் இணைகிறார் ராஜண்ணா காங்., - எம்.எல்.ஏ., திடுக் தகவல்

ராம்நகர் : ''பா.ஜ.,வில் இணைய ராஜண்ணா விண்ணப்பித்துள்ளார்,'' என, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, 'பகீர்' கிளப்பியுள்ளார். துமகூரு, மதுகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜண்ணா. முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான இவர், கூட்டுறவு அமைச்சராக இருந்தார். ஓட்டுத் திருட்டு விவகாரம் குறித்து போராட்டம் நடத்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலை கிண்டல் செய்து பேசியதால், ராஜண்ணாவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதிருப்தியில் இருக்கும் அவரை, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் சந்தித்து பேசி, பா.ஜ.,வில் இணையும்படி அழைப்பு விடுத்தனர். டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, தனக்கு எதிராக நடக்கும் சதி பற்றி சொல்லப் போவதாக ராஜண்ணா கூறி இருந்தார். இந்நிலையில், ராம்நகரின் மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா நேற்று அளித்த பேட்டி: ராஜண்ணாவின் அமைச்சர் பதவி பறிபோனதற்கு, அவரது பேச்சு தான் காரணம். அமைச்சராக இருந்தபோது, வாய்க்கு வந்தபடி அவர் என்னென்ன பேசினார் என்பது, மாநில மக்களுக்கு நன்கு தெரியும். அவருக்கு எதிராக யாரும் சதி செய்யவில்லை. அவர் வேறு கட்சியில் சேர முடிவு செய்துவிட்டார். பா.ஜ.,வில் இணைய விண்ணப்பம் போட்டுள்ளார். அந்த கட்சியின் தேசிய, மாநில தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார். ராஜண்ணாவுக்கு, 'பிரைன் மேப்பிங்' செய்தால், அனைத்து உண்மையும் வெளிப்படும். தற்போது காங்கிரஸ் அரசு உள்ளதால், அமைதியாக இருக்கிறார். இல்லாவிட்டால் எப்போதோ கட்சி தாவி இருப்பார். ஆதரவாளர்களை டில்லி அழைத்துச் சென்று, மாநாடு நடத்தப் போவதாக கூறுகிறார். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பாலகிருஷ்ணா, துணை முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி