பெங்களூரில் பாலியல் பலாத்கார சம்பவங்கள்... அதிகரிப்பு! 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த குற்றங்கள்
கர்நாடகாவில் பல்வேறு இடங்களில், பெண்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக பெங்களூரில், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. பி.எம்.டி.சி., பஸ்கள், வாடகைக் கார், ஆட்டோவில் பயணிக்கும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.சமீபத்தில் நகரின் சாலை ஒன்றில், நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு, ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. சில மாதங்களுக்கு முன், வட மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். டில்லியில் பஸ்சில் மாணவி கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலையான சம்பவத்துக்கு பின், மத்திய, மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. பஸ்கள், சாலைகள் உட்பட, அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பெண்கள் அபாயத்தில் சிக்கும் போது, தொடர்பு கொள்ள போலீஸ் துறை மொபைல் செயலியும் அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டி.சி.,யும் கூட தனியாக ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இவ்வளவு நடவடிக்கைக்கு பின்னரும், பலாத்கார குற்றங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது, வருத்தத்துக்குரிய விஷயமாகும். பாலியல் குற்றங்கள், நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ல் 571ஆக இருந்த பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை, 2024ல் 1250 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக, பிரபல எழுத்தாளர் ரூபா ஹாசன் கூறியதாவது:பாலியல் குற்றங்கள் என்பது, ஆழமாக வேரூன்றிய சமூக பிரச்னையாகும். இதற்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். பாலியல் குற்றங்கள் குறைய வேண்டுமானால், தண்டனைகள் கடுமையாக வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும். பள்ளிக்கல்வி கட்டத்திலேயே, பாலியல் கல்வி அளிக்க வேண்டும். இது, குற்றங்களை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்து, அரசு ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து, நிரந்தரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்குw ஏற்பட்ட அநியாயத்தை பற்றி, புகார் அளிக்க ஊக்கம் கிடைக்கிறது.கடந்தாண்டு டெபுடி கமிஷனர் சாரா பாத்திமா, ஆன்லைன் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைநளங்களில் பரவியது.ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், பாலியல் குற்றங்கள் குறித்து ஆன்லைனில் வரும் தகவல்களை கவனிக்க, சமூக வலைதளப் பிரிவு உள்ளது. அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால், பாதிக்கப்பட்டவருக்கும், விசாரணை அதிகாரிகளுக்கும் உதவியாக இருக்கும். சாட்சியங்களை சேகரிப்பதும் எளிதாக இருக்கும். குற்றவாளியை விரைந்து கைது செய்யலாம். எங்களின் நேரமும் மிச்சமாகும்.பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக வலைதளங்களில் விவரிக்க வேண்டாம் என, நாங்கள் கூறவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தால், குற்றவாளி தப்பித்து விடாமல், விரைந்து கைது செய்யலாம். பாதிப்புக்கு ஆளானவர்கள், தைரியமாக எங்களை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் விபரங்களை ரகசியமாக வைத்திருப்போம். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.