தசரா யானையுடன் ரீல்ஸ் இளம்பெண்ணுக்கு சிக்கல்
மைசூரு: தசரா யானையுடன், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு அபராதம் விதிக்க வனத்துறை தயாராகிறது. மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்திருக்கும் 14 யானைகள், அரண்மனை வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளன. தசரா யானைகள் அருகில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, யானைகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்கு சென்ற ஒரு இளம்பெண், யானையின் தந்தம், தும்பிக்கையை தடவியபடி புகைப்படம், வீடியோ எடுத்தார். இதை ரீல்ஸ் வீடியோவாக தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவை பார்ப்போர், வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து மைசூரு வன அதிகாரி பிரபு கவுடா கூறுகையில், ''பாகன்கள் அனுமதியின்றி, தசரா யானையின் அருகில் சென்று தும்பிக்கை, தந்தந்தை தடவிக் கொடுப்பது போல இளம்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ''அந்த இளம்பெண் யார் என்று கண்டறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்வோம். அவரிடம் அபராதம் வசூலிப்போம். ''இதற்கு முன்பு யானை முன் வீடியோ, புகைப்படம் எடுத்த மூன்று பேருக்கு, தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.