மின்துறை அமைச்சர் மகன் வழக்கில் நிம்மதி
பெங்களூரு: மைசூரில் சரகுருவின் சம்புகவுடனஹள்ளி, லக்கசோகே கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு நுகு சரணாலயம் வழியாக செல்ல, மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மகன் ராணா ஜார்ஜுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்து உள்ளது.இது தொடர்பாக, மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மகன் ராணா ஜார்ஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயின் சரகுரு பேரூராட்சியின் சம்புகவுடனஹள்ளி, லக்கசோகே கிராமத்தில், சர்வே எண் 1, 2, 3, 26, 32, 33 நிலங்கள் உள்ளன. இந்த நிலம், நுகு சரணலாயம் எல்லையை ஒட்டி வருகிறது. 2024 மார்ச் 1ல், சரணாலயம் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்த, மாநில முதன்மை வன அதிகாரி தடை விதித்துள்ளார்.என் நிலத்திற்கு செல்ல, மாற்றுப்பாதை உள்ளது. ஆனால், பருவமழை காலத்திலோ அல்லது நுகு அணையில் தண்ணீர் 100 அடியை தாண்டும் போதோ, இப்பாதையை பயன்படுத்த முடியாது.இதனால் சரணாலயம் வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இப்பாதைக்கு மாநில முதன்மை வன அதிகாரி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, இப்பாதையை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணை நடந்தது வந்தது. நேற்று நீதிபதி அளித்த தீர்ப்பில், ''சரணாலயம் வழியாக, தனது நிலத்துக்கு செல்ல, மனுதாரருக்கு தலைமை வனத்துறை அதிகாரி பிறப்பித்த தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த பயணத்தின் போது சரணாலயத்தில் உள்ள விலங்குகள், செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது,'' என்றார்.