| ADDED : நவ 24, 2025 03:34 AM
தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள குட்டஹள்ளி கிராமத்தில் உள்ள பங்காரு திருப்பதி கோவிலில், இரண்டு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தங்கவயலின் குட்டஹள்ளி மலை பகுதியில், பங்காரு திருப்பதி என்ற வெங்கட ரமண சுவாமி கோவில் உள்ளது. கர்நாடக அரசின் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவில், 25 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அதன் பின், கோவிலின் கோபுரத்துக்கு வண்ணம் கூட பூசப்படாமல் இருந்தது. இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும், விடுமுறை நாளான ஞாயிறன்றும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் கணபதி, ஆஞ்சநேயர் சன்னிதிகள், எதிர்புறமலையில் மஹாலட்சுமி கோவில் உள்ளது. கோவிலில் அழகிய குளம் உள்ளது. திருமண மண்டபம், தங்கும் விடுதி வசதிகளும் உள்ளன. இக்கோவிலில் நிர்வாக அலுவலகம், கோவில் அரங்கம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் சுவாமி தரிசனம் செய்வதற்காக 'லிப்ட்' வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. இரண்டு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் பூமி பூஜை நடந்தது. கோவில் நிர்வாகக்குழு தலைவர் அசோக் கிருஷ்ணப்பா, பால் கூட்டுறவு சங்க இயக்குனர் ஜெயசிம்ம கிருஷ்ணப்பா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.