உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., மாநகராட்சி கடைகளின் வாடகை பாக்கி ரூ.150 கோடி

பெங்., மாநகராட்சி கடைகளின் வாடகை பாக்கி ரூ.150 கோடி

பெங்களூரு: 'மாநகராட்சி மார்க்கெட்டுகளில் கடை வைத்திருப்போர்களிடம் இருந்து வாடகை, குத்தகை தொகையாக 150 கோடி ரூபாய் பாக்கி உள்ளது' என மாநகராட்சியின் வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளனர். பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 118 மார்க்கெட்டுகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுகளில் மொத்தம் 5,956 கடைகள் உள்ளன. இந்த கடைகள், வாடகை அல்லது குத்தகை முறையில் ஒதுக்கப்படும். இந்த கடைகளில் இருப்போரில் பெரும்பாலானோர் வாடகை, குத்தகை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நோட்டீஸ் இது குறித்து, பெங்களூரு மாநகராட்சியின் வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் முறையாக வாடகை, குத்தகை தொகையை செலுத்துவதில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் வியாபாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகை, 150 கோடி ரூபாயாகும். பணம் செலுத்தாதோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் வரை 2.14 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ல் கடைகளின் வாடகை தொகை, சதுர அடிக்கு 31 முதல் 33 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதை சொல்லியே பல வியாபாரிகள், வாடகை கொடுக்காமல் 'போக்கு' காண்பித்து வருகின்றனர். அடிப்படை வசதி வியாபாரிகளிடம் இருந்து, வாடகை, குத்தகை தொகையை வசூலிக்க வேண்டிய பொறுப்பு மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, சிட்டி மார்க்கெட் பூ வியாபாரிகள் அசோசியேஷன் தலைவர் ஜி.என்.திவாகர் கூறுகையில், ''2002ல் கடைகளின் வாடகை தொகை சதுர அடிக்கு 10 ரூபாய்க்குள் மட்டுமே வசூலிக்கப்பட்டது. 2015க்கு பின் பல மடங்காக அதிகரித்து உள்ளது. இதை செலுத்துவதற்கு தயாராக உள்ளோம். ஆனால், மார்க்கெட்டில் கழிப்பறை, குடிநீர், லிப்ட்டுகள் போன்ற அடிப்படை வசிதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !