உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீஸ்காரர்களை கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை

போலீஸ்காரர்களை கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை

விஜயபுரா: வழிப்பறி வழக்கில் கைது செய்ய சென்றபோது, போலீஸ்காரர்களை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற, ரவுடியை போலீசார் 'என்கவுன்ட்டர்' செய்தனர். விஜயபுராவின் அலமேல் தாலுகா, தேவாங்கோ கிராமத்தை சேர்ந்தவர் யூனுஸ் இக்லாஸ் படேல், 35; ரவுடி. நேற்று முன்தினம் இரவு விஜயபுரா டவுனில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவரை மறித்து, கத்தியால் குத்திய யூனுஸ், அந்த நபரிடம் இருந்து 25,000 ரூபாய் ரொக்கம், ஸ்கூட்டரை பறித்துக் கொண்டு தப்பினார். காயம் அடைந்த நபர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காந்தி சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். யூனுஷ், தன் சொந்த ஊரான தேவாங்கோ கிராமத்திற்கு தப்பிச் சென்றது, காந்தி சவுக் இன்ஸ்பெக்டர் பிரதீப் தலகேரிக்கு தெரிந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் தேவாங்கோ கிராமத்திற்கு, பிரதீப் தலைமையில் போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் ஸ்கூட்டரில் யூனுஸ் தப்பினார். அவரை பின்தொடர்ந்து ஜீப்பில் போலீசார் சென்றனர். சிந்தகி தாலுகாவின் ராமபுரா பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டரில் இருந்து தவறி, யூனுஸ் விழுந்தார். அவரை போலீசார் பிடித்தனர். ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, தன்னிடம் இருந்த கத்தியால் இரண்டு போலீஸ்காரர்களை குத்திவிட்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பிரதீப், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார். கோபம் அடைந்த யூனுஸ், பிரதீப்பை கத்தியால் குத்த முயன்றார். உயிரை காப்பாற்றிக் கொள்ள விலகியபோது, பிரதீப் தவறி விழுந்தார். தன்னை கத்தியால் குத்த வந்த யூனுஸின், இடது காலில் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்த யூனுஸ், காயம் அடைந்த போலீஸ்காரர்கள் சிந்தகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்காக விஜயபுரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி கூறுகையில், ''காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், யூனிஸ் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேற்கொண்டு விசாரணை நடக்கிறது. யூனுஸ் மீது 12 வழக்குகள் உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ