முதியவரை காப்பாற்றிய ஆர்.பி.எப்., வீரர்
பெலகாவி : ஓடும் ரயிலில் இறங்க முற்பட்டு, தண்டவாளத்தில் விழுந்த முதியவரை, ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர் காப்பாற்றினார். பெலகாவி மாவட்டத்தின் உச்சகாவ் அருகில் உள்ள பசுரதே கிராமத்தில் வசிப்பவர் பரமா கங்கராம் கும்பார், 55. இவரது பேத்தி லட்சுமி ராஜாராம் கும்பார், புனே செல்ல வேண்டியிருந்தது. இவரை ரயில் ஏற்றி விடுவதற்காக, நேற்று முன் தினம் மதியம், பெலகாவி ரயில் நிலையத்துக்கு, பரமா கங்கராம் கும்பார் வந்திருந்தார். மைசூரு - அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பேத்தியை ஏற்றிவிட்டார். ரயில் நின்றிருந்ததால், பரமா கங்கராம் பெட்டியில் ஏறி, பேத்தியுடன் பேசி கொண்டிருந்த போதே, ரயில் கிளம்ப துவங்கியது. அவர் அவசர, அவசரமாக ஓடும் ரயிலில் இருந்து, கீழே இறங்க முயற்சித்தார். அப்போது தவறி விழுந்த அவர், பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையிலுள்ள சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டார. இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர், தாமதிக்காமல் ஓடி வந்து, ரயில் சக்கரத்தில் சிக்கவிருந்த முதியவரை பிளாட்பாரத்துக்கு இழுத்ததால், அவர் உயிர் பிழைத்தார். முதியவர் அபாயத்தில் சிக்கியது, அவரை ரயில்வே பாதுகாப்பு ஊழியர் காப்பாற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் ஆர்.பி.எப்., ஊழியரை பாராட்டினர்.