ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு செலவழித்த ரூ.165 கோடி வீண்!: மீண்டும் ஆய்வு நடத்தும் திட்டத்தால் மக்கள் அதிருப்தி
பெங்களூரு: அனைத்து சமுதாயங்களுக்கும் நியாயம் கிடைக்க செய்வதாக கூறி, 165 கோடி ரூபாய் செலவிட்டு, கர்நாடக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதன் அறிக்கை வந்துள்ள நிலையில், ஆன்லைன் வழியாக மறு ஆய்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. 'மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியது சரியா' என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கடந்த 2015ல் காங்கிரஸ் ஆட்சியில், சித்தராமையா முதல்வராக இருந்தார். அனைத்து சமுதாயங்களுக்கும், அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அந்தந்த சமுதாயங்களுக்கு சலுகைகள், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, விரும்பினார். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்றைய பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணைய தலைவர் காந்தராஜு தலைமையில் ஆணையம் அமைத்தார். --------
அனைத்து மாவட்டங்களுக்கும், ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பயணம் செய்ய வாகனம், அலுவலக வசதிக்கு 160 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. முழுமையான அறிக்கை பெறுவதற்குள், 2018ல் ஆட்சி மாறியது. அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசும், அடுத்து வந்த பா.ஜ., அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெறுவதில், ஆர்வம் காட்டவில்லை.கடந்த 2023ல் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்து, சித்தராமையா மீண்டும் முதல்வரானார். அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெற ஆர்வம் காட்டினார்.இறுதி அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை, கர்நாடக பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இன்றைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேவிடம் ஒப்படைத்தார். இதற்காக மீண்டும் 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அவரும் கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை தயாரித்தார்.ஆனால், 'முறையாக ஆய்வு நடத்தவில்லை. முதல்வர் சித்தராமையாவின் உத்தரவுபடி அறிக்கையை பெற கூடாது' என, எதிர்க்கட்சியினர், லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயங்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை பொருட்படுத்தாமல், அரசு அறிக்கையை பெற்று கொண்டது. இதை அமைச்சரவையிலும் தாக்கல் செய்தது. --------
இதற்கிடையே இதில் உள்ள அம்சங்கள் வெளியே கசிந்தது. கர்நாடகாவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை அதிகமாகவும், லிங்காயத், ஒக்கலிகர் அதற்கடுத்த இடங்களில் இருப்பதாவும் கூறப்பட்டது. இதனால் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் கொதித்தெழுந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அறிக்கையை செயல்படுத்தினால், போராட்டம் நடத்துவதாக எச்சரித்தனர். எனவே இதை செயல்படுத்த, முதல்வர் சித்தராமையா தயங்கினார். இதை செயல்படுத்தும்படி பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய அமைச்சர்களும், மற்றொரு பக்கம் செயல்படுத்த கூடாது என, லிங்காயத், ஒக்கலிக சமுதாய அமைச்சர்களும் நெருக்கடி கொடுத்தனர். என்ன செய்வது என, தெரியாமல் முதல்வர் கையை பிசைந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் மேலிட அழைப்பின்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் டில்லிக்கு சென்றனர். அங்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து ராகுல் உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசித்தனர். அப்போது, இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டாம். புதிதாக மறு ஆய்வு நடத்தும்படி காங்., மேலிடம் உத்தரவிட்டது.இதன்படி ஆன்லைன் வழியாக, புதிதாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக, முதல்வர் சித்தராமையா டில்லியில் அறிவித்தார். இதனால், முந்தைய கணக்கெடுப்புக்கு செலவிட்ட 165 கோடி ரூபாய் வீணாகியுள்ளது. நல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய மக்களின் வரிப்பணத்தை, வீணாக்கியது சரியா என, பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.இது குறித்து, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுனில் குமார், நேற்று அளித்த பேட்டி: --------
ஜாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில், 10 ஆண்டுகளாக பொய்யான புள்ளி விபரங்களை மக்களிடம் கூறி வந்த முதல்வர் சித்தராமையா, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 165 கோடி ரூபாயை தவறாக பயன்படுத்தியுள்ளனர். வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், முடா ஊழல், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு பெயரில் ஊழல் செய்துள்ளனர்.மத்திய அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு நடத்தும் நிலையில், மற்றொரு பக்கம் மாநில அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சரியா. மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.