நடைபாதையில் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம்
பெங்களூரு: ‘‘நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்,’’ என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரித்தார். இதுகுறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: சாலை விதிகளை கடுமையாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை மற்றும் உள்துறை இணைந்து ஆலோசனை நடத்துகின்றன. இரண்டு துறைகளும் ஒருங்கிணைந்து முடிவு செய்யும். சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நடமாடும் நடைபாதைகள் மீது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி, மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றனர். உயிரிழப்புகளும், காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதற்கு முன் நடைபாதையில் வாகனம் ஓட்டுவோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இனி, இத்தகைய தவறுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராத தொகை அளவை, அதிகரிப்பதன் வாயிலாக, போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும். சாலை விதிகளை மீறுவோருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.