மேல்சபை எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
பெங்களூரு: கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமிக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்றது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமியின் வீட்டுக்கு, மூன்று போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பாதுகாப்பை உள்துறை திரும்பப் பெற்று, நேற்று உத்தரவிட்டது. அதேபோன்று, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அதேவேளையில் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவுக்கு அளிக்கப்பட்டிருந்த மெய்க்காவல் படை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உள்துறை உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. உள்துறையின் செயல்பாட்டுக்கு, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சலவாதி நாராயணசாமி கூறியதாவது: என் வீட்டுக்கு மெய்க்காவல் ஊழியர்களை நியமித்திருந்தனர். என் பாதுகாப்பை மனதில் கொண்டு, பாதுகாப்பு அளிப்பது கட்டாயம். ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியர்களை, அரசு திரும்பப் பெற்றுள்ளது. எனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெற்றதன் பின்னணியில், அமைச்சர் பிரியங்க் கார்கே இருக்கிறார். எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு அரசு மட்டுமின்றி, அமைச்சர் பிரியங்க் கார்கேவும் பொறுப்பு. எனக்கு அளித்திருந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றது ஏன்? இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு அளிக்கப்பட்ட கார், மெய்க்காவல் ஊழியரை திரும்ப அனுப்புவேன். பிரியங்க் கார்கேவுக்கு மிரட்டல் வந்ததால், என் வீட்டுக்கு அளித்த பாதுகாப்பை திரும்பப் பெற்று, தன் வீட்டில் பாதுகாப்பை அதிகரித்துக் கொண்டார். இவர்களின் ஊழலை பற்றி, எதிர்க்கட்சியினர் பேசக்கூடாது என்பதால், இப்படி செய்கின்றனர். நான் மேல்சபை எதிர்க்கட்சித் தலைவராகி, ஒன்றரை ஆண்டு ஆகிறது. இதுவரை அரசு வீடு வழங்கவில்லை. இதே பதவியில் சித்தராமையா இருந்தபோது, சண்டை போட்டு வீடு பெற்றுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.